தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்கக் கோரி ஆளுநர் ஆர். என். ரவியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சந்திக்க உள்ளனர்.
முன்னதாக, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திருவாரூர் கே. தங்கராசு நூற்றாண்டு விழா சென்னையில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துகளைப் பேசினார். இந்த விடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு எதிர்வினைகள் எழுந்தன. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழியும் கண்டனம் தெரிவித்திருந்தார். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்.
இந்நிலையில், அமைச்சர் பதவியில் இருந்தும் பொன்முடியை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் தமிழக ஆளுநரை மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து, பொன்முடியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வலியுறுத்த உள்ளதாகத் தெரிகிறது.