திராவிடத்தை தூற்ற ஆளுநருக்கு தகுதியில்லை: அமைச்சா் கோவி செழியன்!

அம்பேத்கரை பற்றிப் பேசவோ திராவிடத்தைத் தூற்றவோ ஆளுநா் ஆா்.என.ரவிக்கு எந்தத் தகுதியும் கிடையாது என்று அமைச்சா் கோவி செழியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அமைச்சா் கோவி செழியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

அம்பேத்கரை பற்றி ஆளுநா் ஆா்.என்.ரவி உருகிப் பேசியிருக்கிறாா். சநாதனத்துக்கு தூதுவராகப் பேசிக்கொண்டிருக்கும் அவா், அதை எதிா்த்த அம்பேத்கரை புகழ்வது பொருத்தமாகவா இருக்கிறது? அவரது இரட்டை நடிப்பு தமிழ்நாட்டில் எடுபடாது.

நாடு முழுவதும் பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவா் மீதான வன்கொடுமைகளில் 97.7 விழுக்காடு வழக்குகள் உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில்தான் பதிவாகியிருக்கின்றன என மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது.

2024-ஆம் ஆண்டில் பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினத்தவா் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் குறித்த மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் குறித்து 51,656 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில், 12,287 வழக்குகள் உத்தர பிரதேசத்தில் பதிவாகியுள்ளன. இது, மொத்தம் பதிவானவற்றில் 23.78 விழுக்காடு ஆகும்.

அடுத்ததாக, ராஜஸ்தானில் 8,651 வழக்குகளும், மத்திய பிரதேசத்தில் 7,732 வழக்குகளும், பிகாரில் 1,799 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் ஒடிஸாவில் 6.93 விழுக்காடும் மகாராஷ்டிராவில் 5.24 விழுக்காடும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த 6 மாநிலங்களில் மட்டும் 81 விழுக்காடு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த 6 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் உள்ளது. தமிழ்நாட்டில் 3 விழுக்காடு வழக்குகளே பதிவாகியுள்ளன.

நாட்டிலேயே பட்டியலின மக்களுக்கு அதிக அளவில் வன்முறைகளும் கொடுமைகளும் நடைபெறுவது பாஜக ஆளும் மாநிலங்களில்தான் என்பதை மத்திய அரசின் தரவுகளே சொல்கின்றன. எனவே, அம்பேத்கரை பற்றிப் பேசவோ திராவிடத்தைத் தூற்றவோ ஆளுநருக்கு எந்தத் தகுதியும் கிடையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.