ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-
இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஜாட் திரைப்படம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தாயக விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
வட இந்தியாவில் அயோத்தி அருகே நடக்கும் கதைக்களத்தில், கதைக்கு சிறிதும் தொடர்பின்றி யாழ்ப்பாணப் புலிப்படை என்று உள்நோக்கத்துடன் பெயர்வைத்து தமிழீழ விடுதலைப்போராட்டம் தவறானது போலவும், அதன் தளபதிகள் கொடூர வில்லன்கள் போலவும் கட்டமைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. முழுக்க முழுக்க தமிழர்கள் மீதான இனவெறுப்பினாலேயே இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதை எளிதில் உணர முடிகிறது.
தாயகக்கனவுடன் சாவினைத் தழுவி, உலகத்தமிழர்களின் உள்ளத்தில் வைத்து வணங்கப்பெறுகின்ற
எம்மாவீரத் தெய்வங்களை அவமதிப்பதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது. ஆகவே, ஜாட் திரைப்படக் குழு, ஈழ விடுதலைப்போராட்டத்தைத் தவறாகச் சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு அரசு கடந்த காலங்களைப்போல மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஜாட் திரைப்படத்தை உடனடியாக தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் பெரும் மக்கள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுத்து திரையரங்குகளை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தும் எனவும் அறிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.