பாஜகவுடன் அதிமுகவுக்கு கட்டாய திருமணம்: ஆ.ராசா விமர்சனம்!

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்காக பாஜக- அதிமுக இடையேயான கூட்டணி என்பது கட்டாய திருமணம் போல நடந்துள்ளது; முதலிரவுக்கு முன்னரே மணப் பெண் அல்லது மணமகன் ஓடிவிடுவது போன்ற மனநிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து திமுக மூத்த தலைவர் ஆ.ராசா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

அதிமுக- பாஜக கூட்டணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்த போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முகத்தைப் பார்த்தீர்களா? அவரது கை, கால் ஏதாவது அசைந்ததா?எடப்பாடி பழனிசாமியை பேசத்தான் விட்டாரா அமித்ஷா? அதிமுகவுக்குதான் 20% அல்லது 25% என்ற வாக்கு வங்கி உள்ள பிரதான எதிர்க்கட்சி. அதிமுகவை நாம் குறைவாக மதிப்பிடவில்லை. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே 6% வாக்கு வித்தியாசம் உள்ளது. அதிமுக என்பது எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்டது; ஜெயலலிதா அம்மையாரால் பாதுகாக்கப்பட்டது. அண்ணா திமுகவுக்கு இங்கே ஒரு தளம் இருக்கிறது. தமிழ்நாட்டில் உண்மையாகவே ஒரு ஆதரவு தளம் உள்ள அரசியல் கட்சி, தமிழ்நாட்டில் கூட்டணி அமைக்கிற போது, என்னதான் அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராக இருந்தாலும் அவர் 20 நிமிடம் பேசினாலும் எடப்பாடி பழனிசாமியை ஒரு 5 நிமிடமாவது பேசவிட்டிருக்க வேண்டும். பாஜகவுடனான கூட்டணியில் உடன்பாடுதான் என்று எடப்பாடி பழனிசாமியை சொல்ல வைக்க வேண்டும்தானே? ஆனால் கை கால்களை கட்டிப் போட்டு கூட்டிக் கொண்டு வந்து நாடகம் நடித்துவிட்டு போனது போல தெரிகிறது.

இதில் எங்களுக்கு- திமுகவுக்கு ஏன் தூக்கம் கெட்டுப் போக வேண்டும்? இனிமேல்தான் நன்றாகவே தூங்க போகிறோம். ஒரு திருமணம் முடிந்த பின்னர், முதலிரவு முன்னதாக ஓடிப் போன பெண்களை பார்த்துள்ளீர்களா இல்லையா? அப்படி முதலிரவுக்கு முன்னதாக ஓடிப் போன பெண்ணுக்கு பின்னால் இந்த நெருக்கடி என்ன?அதேபோல மாப்பிள்ளையும் முதலிரவுக்கு முன் ஓடிப் போயிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் மனநிலை என்ன? இதேபோலதான்.. தற்போது எடப்பாடி பழனிசாமி ஓடிவிடவில்லை அவ்வளவுதான். நான் சொல்வதைப் போல முதலிரவுக்கு முன்னதாக ஓடிப் போய்விடுகிற மனநிலையும் நெருக்கடியும் கட்டாயமும் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியால் (கூட்டணியை விட்டு) ஓட முடியாது. இருந்தாலும் பாஜக கூட்டணியை விட்டு ஓடிவிட வேண்டும் என்கிற அத்தனை உளவியல் தன்மையும் எடப்பாடி பழனிசாமியின் முகத்தில் அன்று தெரிந்தது.

2024-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றுதான் திமுக எதிர்பார்த்தது. அதனால்தான் நீட் தேர்வு ரத்து தொடர்பாக வாக்குறுதி தந்தோம். ஆனால் சொற்ப வித்தியாசத்தில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. இருந்த போதும் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை திமுக தொடர்ந்து நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் யார் வெஎண்டுமானாலும் இந்தி படிக்கலாம்; என் மகள் கூட இந்தி மொழியை படித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்தி மொழியை படிக்க வேண்டாம் என்று யார் சொன்னது? இந்தியை திணிக்காதே என்றுதான் சொல்கிறோம். மும்மொழிக் கொள்கை என்று சொல்வதற்கு காரணமே தமிழ்நாட்டில் இந்தி மொழியைத் திணிக்க வேண்டும் என்பதுதான். 1927-ம் ஆண்டு முதலே சென்னையில் இந்தி பிரசார சபா சென்னையில் இருக்கிறது. .நாங்கள் என்ன கல்லை எடுத்து அடித்தோமா? இந்தியை திணிக்கத்தான் கூடாது என்கிறோம். இவ்வாறு ஆ.ராசா கூறினார்.