மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி, இந்த ஆண்டு முதல் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தமிழக சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கையில் தமிழ் வளர்ச்சித் துறை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறை உள்ளிட்ட துறை மீதான விவாதங்கள் நடைபெற்றன. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
1. கோவை செம்மொழி பூங்காவில் தமிழ்த் தாய் உருவச் சிலை நிறுவப்படும்.
2. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பின்னோக்கு கலையரங்கம் அருகே ரூ.50 லட்சம் செலவில் திருவள்ளுவரின் சிலை நிறுவப்படும்.
3. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 இந்த ஆண்டு முதல் செம்மொழி நாளாக கொண்டாடப்படும்.
4. அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா பிறந்தநாளான ஜூன் 15, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
5. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சியில் மணிமண்டபம் அமைக்கப்படும்.
6. தற்போது மாதந்தோறும் தமிழறிஞர்கள் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.4,500லிருந்து ரூ.7,500ஆகவும், எல்லைக் காவலர்களுக்கு ரூ.5,500லிருந்து ரூ.7,500ஆகவும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ரூ.3,500லிருந்து ரூ.7500ஆகவும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.
7. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் வாயிலாக பயனாளிகளின் எண்ணிக்கை 100லிருந்து 150ஆக உயர்த்தப்படும் தமிழ் வளர்ச்சிக் கழகம் தொய்வின்றி செயற்பட வைப்புத் தொகையாக 2 கோடி வழங்கப்படும்.
8. 10 தமிழறிஞர்கள் பதின்மரின் நூல்கள் ஒரு கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் செலவில் நாட்டுடைமை செய்யப்படும்.
9. சென்னை மாவட்டம், மதுரவாயல் வட்டம், துண்டலத்தில் அமைந்துள்ள திரு.வி.க நூலகம் 1 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்
10. மொழிப்பெயர்ப்பாளர் க.ரா ஜமதக்னிக்கு ரூ.25 லட்சம் செலவில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் நினைவுத்தூண் நிறுவப்படும்.
11. சங்க காலப் புலவர் குறமகள் இளவெயினிக்கு ரூ.50 லட்சம் செலவில் மதுரையில் திருவுருவச் சிலை நிறுவப்படும்
12. கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த நாளான நவம்பர் 9 ஆம் நாளை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
13. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அறிஞர்களின் அவையம் என்ற பெயரில் துறை சார்ந்த வல்லுநர்களின் கலந்தாய்வுக் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்படும்.
14. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘தொல்காப்பியர் சுழலரங்கம்: மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம்’ சிறப்புப்பொழிவு நடத்தப்படும்.
15. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பில் பயிலும் 15 மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகையாக 2000 ரூபாயும், தங்கிப் பயிலும் 45 மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கான ரூ.12 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
16. சமயம், இலக்கியம் மட்டுமின்றித் தமிழ் இலக்கிய உலகில் பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசைத்திறன் போன்ற பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்ற தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
17. இசை முரசு நாகூர் இ.எம்.அனிபாவின் நூற்றாண்டு விழா நாகப்பட்டினம் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
18. வேலூர் அண்ணா கலையரங்கம் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
19. மாநிலம் முழுவதும் உள்ள நினைவகங்களில் கண்காணிப்புக் கேமிராக்கள் (CCTV) பொருத்தப்படும். மாவட்டங்கள் மற்றும் மாநில அளவில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும்.
20. சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மண்டபம் மற்றும் தமிழ்மொழித் தியாகிகள் மண்டபங்களில் ரூபாய் 2.50 கோடி செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.