தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை எதிர்த்து புதிய அரசியல் சித்தாந்தத்தை உருவாக்கி உள்ளார்; எந்த கட்சியுடனுமே தொடர்பே இல்லாமல் புதிய சித்தாந்தத்தை உருவாக்கிய சீமானுக்கு தமிழ்நாட்டு அரசியலில் தனித்த இடம் உண்டு என்று பாஜக ஆதரவாளரான துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கான வாக்கு 6%-ல் இருந்து 16% ஆக உயர்ந்துள்ளது. இதனை நிறைய பேர் கவனிக்காமல் விட்டுவிட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமான், பெரியாரை எதிர்த்து பேசினாரா இல்லையா? தமிழ்நாட்டில் பெரியாரை எதிர்த்து கடுமையாக பேசி, இது பெரியார் மண் அல்ல- பெரியாரே மண்ணுதான் என்று கூறியவர் சீமான். அவர் 6%-ல் இருந்து 16% ஓட்டுகளை ஈரோடு கிழக்கு தொகுதியில் வாங்கி இருக்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமான் பெற்றது மிகப் பெரிய வெற்றி. சீமான் அவருக்கு என ஒரு சித்தாந்தத்தை உருவாக்கி இருக்கிறார். தமிழ்நாட்டிலேயே ஒரு புதிய அரசியல் சித்தாந்தம் அது. இதுவரை யாருமே செய்ய முடியாத ஒரு காரியம். அதனால் சீமானுக்கு தமிழக அரசியலில் ஒரு தனிடம் இருக்கிறது. சீமான், எந்த ஒரு கட்சியுமே தொடர்பே இல்லாத ஒரு சித்தாந்தத்தை சீமான் பிடித்து வைத்துள்ளார். இவ்வாறு ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.