அதிமுக பாஜக கூட்டணி சீக்கிரம் உடையும்: செல்வப்பெருந்தகை!

அதிமுக பாஜக கூட்டணி கூட்டணி பொருந்தாத கூட்டணி எனச் சாடியுள்ள காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மிரட்டியே பாஜக கூட்டணிக்குள் அதிமுகவைக் கூட்டிச் சென்றுள்ளதாகவும் சாடினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-

அதிமுக பாஜக இடையே அமைந்துள்ள கூட்டணி இயற்கையான கூட்டணி இல்லை. ஒப்புக்கொள்ளாத கூட்டணி. எப்போது வேண்டுமானாலும் உடையும். அது கட்டாயத்தின் பெயரில் அமைந்துள்ள கூட்டணி. அந்தக் கூட்டணியில் எப்போது வேண்டுமானாலும் விரிசல் வரும். தொண்டர்கள் எப்போது வேண்டுமானாலும் புரட்சி செய்வார்கள். அதை யாராலும் சொல்ல முடியாது. இது விருப்பமான கூட்டணியாக இருந்தால் கூட்டணி அறிவிக்கப்பட்ட போது அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசியிருக்க வேண்டும். அவர் தானே பிரதானத் தலைவர். அவர் ஏன் பேசவில்லை. அவரை ஏன் பேச அனுமதிக்கவில்லை. இல்லை அவர் பேச மறுத்துவிட்டாரா என்பது முக்கியமானது. கூட்டணி என்பதை அவரும் சொல்லியிருக்க வேண்டும் தானே. இது உண்மையான கூட்டணி.. நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை அவர் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவர் பேசவில்லை அல்லது பேச அனுமதிக்கவில்லை. அப்போ ஏதோ கட்டாயத்தின் பெயரில் மிரட்டி கூட்டணியை உருவாக்கியுள்ளனர் என்றே நான் நினைக்கிறேன். மக்களும் இதைத் தான் பார்க்கிறார்கள். இதனால் காரணமாகவே அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் ஒரு சிலர் இதை எதிர்க்கிறார்கள். சிலர் இதைக் கவலையோடும் வருத்தத்தோடும் பார்ப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.

சிஏஐி அமைப்பே சொல்கிறது பாஜக ஊழல் நிறைந்த கட்சி என்று..! உதாரணத்திற்கு உத்தரப் பிரதேசத்தில் போடப்பட்ட சாலைகளைச் சொல்கிறார். ஒரு கிமீ ரோடு போட ரூ.250 கோடி செலவாகுமா? இது குறித்தெல்லாம் நயினார் நாகேந்திரன் விளக்குவாரா?” என்றார்.

அதிமுக பாஜக கூட்டணியைப் பார்த்து திமுக அஞ்சுவதாகப் பாஜகவினர் கூறுவது குறித்த கேள்விக்கு, “பாரதியார் சொன்னதை நான் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். அச்சம் என்பது நாய்களுக்குத் தான் வரும் என சொல்லி இருக்கிறார். எங்களுக்கு எல்லாம் அவர்கள் கூட்டணியைப் பார்த்து அச்சமில்லை” என்றார்.

மேலும் செல்வப்பெருந்தகை பேசுகையில், “திமுகவும் காங்கிரஸும் நல்ல கூட்டணி. மக்கள் நலப்பணிகளைச் செய்வது, மக்களுக்குக் குரல் கொடுப்பது, மதவாதிகளை எதிர்ப்பது, இந்துக்களுக்கு எதிராக இருப்பவர்களை எதிர்ப்பதில் நல்ல கூட்டணி தான். இந்துக்கள் இந்துக்கள் எனச் சொல்லிக் கொண்டு இந்துத்துவ அரசியலைச் செய்வோரை நாங்கள் எதிர்க்கிறோம். இங்கு அனைத்து மதத்தினரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். ஆனால், மதவாதிகள் நாட்டை துண்டாட நினைக்கிறார்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு இதுதான். காங்கிரஸ் கட்சியும் திமுகவும் அனைவருக்குமான கட்சி. ஆனால், பாஜக அனைவருக்குமான கட்சி என்பதை நயினார் நாகேந்திரனால் சொல்ல முடியுமா.. இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் குரல் கொடுப்போம் என அவர் சொல்வாரா..! ஊழல்வாதிகளையும் மதவாதிகளையும் எதிர்க்கும் நல்ல கூட்டணி” என்றார்.

பொன்முடி விவகாரம் குறித்துப் பேசிய அவர், “பொன்முடி பேசியது தவறு.. அதை அனைவரும் எதிர்த்துள்ளனர். கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து அவரை நீக்கியுள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கைக்கும் தயாராகி வருகிறார்கள். முதல்வர் தேவையான நடவடிக்கையை எடுப்பார். இதில் அவ்வளவு தான்” என்றார்.