நீதிபதிகள் சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படுகின்றனர்: ஜக்தீப் தன்கர்!

குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், நீதிபதிகள் நாடாளுமன்றத்துக்கும் மேலாக, சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற 6-வது மாநிலங்களவை பயிற்சித் திட்டத்தின் நிறைவு விழாவுக்கு குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் இருந்து பெருமளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும், இதற்கு நீதித்துறை அளித்த பதில் குறித்தும் கடுமையாக விமர்சித்தார். “மார்ச் 14 மற்றும் 15 ஆம் தேதி இரவு புதுடெல்லியில் உள்ள ஒரு நீதிபதியின் இல்லத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. ஏழு நாட்களுக்கு, அதைப் பற்றி யாருக்கும் தெரியாது. நம்மை நாமே கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும். தாமதம் விளக்கக்கூடியதா? மன்னிக்கத்தக்கதா? இது சில அடிப்படை கேள்விகளை எழுப்பவில்லையா? இதுபோன்ற ஒரு நிகழ்வு சாதாரண சூழ்நிலையில் நடந்திருந்தால், விஷயம் வேறுவிதமாக இருந்திருக்கும். மார்ச் 21 அன்றுதான், ஒரு செய்தித்தாள் இது குறித்த செய்தியை வெளியிட்டது. நாட்டு மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தனர்.

அதன்பிறகு, அதிர்ஷ்டவசமாக இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மூலத்திடம் இருந்து எங்களுக்குத் தகவல்கள் கிடைத்தன. அந்த தகவல், குற்றம் நடந்ததை வெளிப்படுத்தியது. அது சந்தேகத்துக்கு வழிவகுக்கவில்லை. இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இதற்காக நாடு மூச்சுத் திணறலுடன் காத்திருக்கிறது. மக்கள் எப்போதும் மிகுந்த மரியாதையுடன் பார்க்கும் நமது நிறுவனங்களில் ஒன்று, கூண்டில் நிறுத்தப்பட்டதால் நாடு பதற்றமடைந்துள்ளது.

ஒரு குற்றம் நிகழ்ந்தால், இந்த நாட்டில் யாருக்கு எதிராகவும், எந்தவொரு அரசியலமைப்புச் சட்ட அதிகாரிக்கு எதிராகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படலாம், உங்களுக்கு முன் இருப்பவர் (தன்னைக் குறிப்பிடுகிறார்) உட்பட. சட்டத்தின் ஆட்சி செயல்படுத்தப்பட வேண்டும். இதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. ஆனால் அது நீதிபதிகளாக இருந்தால், முதல் தகவல் அறிக்கையை உடனடியாகப் பதிவு செய்ய முடியாது. அது நீதித்துறையில் சம்பந்தப்பட்டவர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால் அரசியலமைப்பு இவ்வாறு கூறவில்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோருக்கு மட்டுமே வழக்குத் தொடுப்பதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. அப்படியானால், சட்டத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் நீதிபதிகளுக்கு விலக்கு அளிப்பது எப்படி? இதன் தீய விளைவுகள் குறித்து அனைவரும் கவலை கொள்கிறார்கள். இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என ஒவ்வொரு இந்தியரும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட குழு ஏன் அமைக்கப்பட்டுள்ளது? நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஏதேனும் சட்டத்தின் கீழ் இந்தக் குழு அனுமதிக்கப்பட்டதா? இல்லை. அந்தக் குழு என்ன செய்ய முடியும்? அந்தக் குழு அதிகபட்சமாக ஒரு பரிந்துரையை வழங்க முடியும். யாருக்கு பரிந்துரை? எதற்காக?

நீதிபதிகளுக்கு நம்மிடம் உள்ள வழிமுறையைப் போலவே, இறுதியாக உள்ள ஒரே வழி நாடாளுமன்றம் மட்டுமே. பதவி நீக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு, ஒரு மாதம் கடந்துவிட்டது. விசாரணைக்கு வேகம் தேவை. நாட்டின் குடிமகனாகவும், குடியரசு துணைத் தலைவர் எனும் பதவியை வகிப்பவனாகவும், நான் கவலைப்படுகிறேன். சட்டத்தின் ஆட்சியை நாம் நீர்த்துப்போகச் செய்யலாமா” என்று கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், மாநில அரசு அனுப்பும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்திருப்பது குறித்து குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆச்சரியம் அடைந்துள்ளார். “சமீபத்திய தீர்ப்பு, குடியரசுத் தலைவருக்கே ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. நாம் எங்கே செல்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது? நாம் மிகவும் உணர்வு உடையவர்களாக இருக்க வேண்டும். யாராவது மறுஆய்வு தாக்கல் செய்கிறார்களா இல்லையா என்பது பிரச்சினை அல்ல. குடியரசுத் தலைவர் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார். இல்லையென்றால், அது சட்டமாக மாறும். எனவே, சட்டம் இயற்றும், நிர்வாக செயல்பாடுகளைச் செய்யும், சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படும் நீதிபதிகள் நம்மிடம் உள்ளனர். மேலும், நாட்டின் சட்டம் அவர்களுக்குப் பொருந்தாது என்பதால் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை,” என்று ஜக்தீப் தன்கர் பேசினார்.