வக்பு சட்ட விவகாரத்தில் வன்முறையை தூண்டி விடுகிறார் மம்தா பானர்ஜி: கிரண் ரிஜிஜு!

வக்பு சட்ட விவகாரத்தில் வன்முறையை தூண்டி விடுகிறார் மம்தா பானர்ஜி. மம்தா பானர்ஜி, அவருடைய சொந்த பதவியையே வலுவிழக்க செய்கிறார் என்பது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு திருத்த சட்டம் நிறைவேறியுள்ளது. அது விரைவில் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. எனினும், மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சுதி, ஜாங்கிப்பூர் மற்றும் சாம்சர்கஞ்ச் பகுதிகளில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 11-ந்தேதி பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அதில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட கும்பல் பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை சூறையாடியது. வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில், வன்முறை பாதித்த சாம்சர்கஞ்ச் பகுதியில் ஜாப்ராபாத் என்ற இடத்தில் வீட்டில் தந்தை மற்றும் மகன் கொல்லப்பட்டனர். வன்முறைக்கு மொத்தம் 3 பேர் பலியானார்கள்.

இந்நிலையில், வன்முறை தொடர்பாக முர்ஷிதாபாத்தில் 220 பேர் கைது செய்யப்பட்டனர். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், முர்ஷிதாபாத்தில் தந்தை மற்றும் மகன் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 2 பேரும் அடங்குவர்.

இந்நிலையில், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கான மந்திரி கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வக்பு திருத்த சட்டம் மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தப்படாது என்ற முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் அறிவிப்பு ஆனது, தீவிர கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம். அரசியல் சாசனத்தின் பண்புகள் மறுக்கப்படுகிறது என அது புரிந்து கொள்ளப்படும் அதேநேரத்தில், மக்களை தூண்டி விடும் வகையிலும் உள்ளது.

முர்ஷிதாபாத் மற்றும் மேற்கு வங்காளத்தின் பிற பகுதிகளில் நடந்து வரும் வன்முறையானது மம்தா பானர்ஜி மற்றும் சில அரசியல் தலைவர்களால் வெளியிடப்படுகிற விழிப்புணர்வில்லாத அரசியல் அறிக்கைகளால் ஏற்படுகிற விளைவு ஆகும். அது கண்டனத்திற்குரியது.

இதுபோன்ற ஓர் உயரிய பதவியில் அமர்ந்து கொண்டு, அவருடைய சொந்த பதவியையே அவர் வலுவிழக்க செய்கிறார் என்றால் அதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. ஆனால், முதல்-மந்திரியே இதுபோன்ற வன்முறையை தூண்டி விட்டு எரிய செய்கிறார். இதனால், மக்கள் பலியாகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.