“திருநெல்வேலியில் சாதிய மோதல்கள் நடக்கவில்லை” என்று சபாநாயகர் அப்பாவு கூறியது, “முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது” என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சாதிய வன்கொடுமைகள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே சாதிய மோதல்கள் அதிகரித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார். ”திருநெல்வேலி மாவட்டத்தில் சாதிய வன்கொடுமைகளும், சாதி ஆணவக் கொலைகளும், குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல் அதிகம் நடக்கும் மாவட்டமாக உள்ளது” என்ற அவர், “திருநெல்வேலியில் சாதிய மோதல்கள் நடக்கவில்லை” என்று சபாநாயகர் அப்பாவு கூறியது, “முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது” என்று சபாநயாகரின் இந்த பேச்சு ஏற்புடையது அல்ல. ஏற்கெனவே நாங்குநேரி மாணவன் சின்னதுரை உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்று, தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கிறார். நேற்று அவர் மீது மீண்டும் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நேற்று முன் தினம் சாதிய மோதலால் பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவர் வெட்டப்பட்டு உள்ளார்” என குற்றம்சாட்டினார்.
மேலும் நீதிபதி சந்துரு ஆணையத்தின் பரிந்துரைகளை உடனடியாக அமல் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். “பள்ளிகள் மற்றும் மாணவர்கள் இடையே நடக்கும் சாதிய மோதல் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு ஆணையம் பரிந்துரைத்த பரிந்துரைகள் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். சாதிய மோதல்களை சட்டம் ஒழுங்கு பிரச்னையாக பார்ப்பதே தவறு, சாதி வெறியர்கள், சாதி ஆணவம் கொண்டவர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய சாதி மோதல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்னையாக பார்த்து இப்பிரச்னைக்கு தீர்வு காண இயலாது என பெ.சண்முகம் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்து அறநிலையத்துறையின் புதிய விதிமுறைகள் மற்றும் அபரிமிதமான வாடகை உயர்வு ஆகியவை, கோயில் நிலங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களையும், குத்தகை விவசாயிகளையும் வெளியேற்றுவதற்கு வழிவகுப்பதாக குற்றம்சாட்டினார். பல தலைமுறைகளாக கோயில் நிலங்களில் வசிக்கும் மக்களை “ஆக்கிரமிப்பாளர்கள்” என்று முத்திரை குத்தி, 20-40 ஆண்டுகளுக்கு வாடகை கட்ட வேண்டும் என்று வற்புறுத்துவது கண்டனத்துக்குரியது என்று தெரிவிக்கப்பட்டது. “இந்த மக்களை ஒழுங்குபடுத்தாதது அறநிலையத்துறையின் குற்றமே. திடீரென புலனாய்வு செய்து, பல ஆண்டு வாடகையை உடனடியாக கட்டச் சொல்வது அநியாயம்,” என்று தெரிவித்தார்.
2019-இல் அதிமுக ஆட்சியில், அறநிலையத்துறை சட்டத்தின் 34-வது பிரிவின்படி ஏழை மக்களுக்கு இலவச பட்டா வழங்க அரசாணை எண் 318 மூலம் 600 ஏக்கர் நிலத்துக்கு பட்டா வழங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்துத்துவவாதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இதைத் தடுத்ததால், அந்த அரசாணை இன்னும் நிலுவையில் உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பெ.சண்முகம் கேட்டுக் கொண்டார்.
நேற்று, சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதில், குடியிருப்பவர்களை வெளியேற்ற மாட்டோம் என்று முதலமைச்சரும் அமைச்சரும் உறுதியளித்ததாக சங்கம் தெரிவித்தது. இருப்பினும், இது நிரந்தர தீர்வாக அமைய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கோயில் மனைகளில் வசிப்பவர்களுக்கு நியாயமான வாடகை மற்றும் நிலத்தை சொந்தமாக்குவதற்கு தவணை முறையில் வசூல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
குத்தகை விவசாயிகளை ஏலம் மூலம் மாற்றுவது, பல தலைமுறைகளாக விவசாயம் செய்யும் விவசாயிகளை வாழ்வாதாரத்தை இழக்கச் செய்வதாக உள்ளது. “குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி, ஆர்.டி.ஆர் குத்தகை உரிமை பதிவு செய்ய வேண்டுமே தவிர, ஏலம் விடுவது சட்டவிரோதம்,” என்று சங்கம் குற்றம்சாட்டியது. இதேபோல், வக்பு வாரிய நிலங்களில் வசிக்கும் இஸ்லாமியர்களிடம் அபரிமிதமான வாடகை வசூலிப்பதும் கண்டிக்கப்பட வேண்டியது என பெ.சண்முகம் கூறி உள்ளார்.