சாதியவாதிகளிடம் தமிழக அரசு தோற்பது ஏன்?: ரவிக்குமார் எம்பி!

சாதியவாதிகளிடம் ஏன் தமிழக அரசு தோற்று போகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லை நாங்குநேரியில் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ரவிக்குமார் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் கூறியிருப்பதாவது:-

சனாதனவாதிகளை எதிர்ப்பதில் வெற்றி காணும் தமிழ்நாடு அரசு சாதியவாதிகளிடம் ஏன் தோற்றுப் போகிறது? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் சக மாணவர்களால் தாக்கப்பட்டார், அதை தடுக்க முயன்ற சின்னத்துரையின் சகோதரிக்கும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இவர் விஜய் நடத்திய கல்வி உதவித்தொகை விழாவில் கூட இவருக்கு விஜய் பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்த நிலையில் அந்த மாணவன் தற்போது பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை என சொன்னதால் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான் அவர் நேற்றைய தினம் மீண்டும் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சின்னத்துரை நேற்று (ஏப்ரல் 16) மாலை சுமார் 6.15 மணியளவில் தனது நண்பரைப் பார்க்க பாளையங்கோட்டை செல்வதாக தாயார் அம்பிகாவிடம் கூறிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து சென்றுள்ளார். தொடர்ந்து, சுமார் 7.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபரின் அலைப்பேசி மூலம் தனது தாயாரை தொடர்பு கொண்டு, மாவட்ட அறிவியல் மையம் அருகிலுள்ள பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன்னை தாக்கியதாகத் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, வலது கையில் சிறிய காயத்துடன் இருந்த சின்னதுரையை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த சின்னதுரையிடம் விசாரித்த போது, தனது இன்ஸ்டாகிராம் நண்பரின் அழைப்பின் பேரில் கொக்கிரகுளம் அருகிலுள்ள வசந்தம் நகர் விரிவாக்கப்பகுதிக்கு சென்றதாகவும், அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் பணம் கேட்டதாகவும், அவரிடம் பணம் இல்லாததால் கட்டையால் தாக்கிவிட்டு, செல்போனைப் பறித்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேற்படி, விசாரணைக்காக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கேட்ட பொழுது தனக்கு மறந்து விட்டதாகவும், அவரது இன்ஸ்டாகிராம் கணக்கினை மீட்டெடுப்பதற்காக அவரது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லைக் கேட்ட பொழுது அதுவும் தனக்கு மறந்து விட்டதாகக் கூறியுள்ளார். பின்னர், சின்னதுரையின் கையில் ஏற்பட்ட சிறிய காயத்திற்கு சிகிச்சை முடித்து தனது சொந்த விருப்பத்தின் பேரில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.