தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில், விண்வெளி தொழில் கொள்கையா? அல்லது கோபாலபுர குடும்ப தொழில் கொள்கையா என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாடு அரசு, விண்வெளி துறையில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை 2025-க்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விவரித்தார். “தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை 2025-க்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளி துறையில் 10,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பது இதன் முக்கிய இலக்கு. மேலும், இதன் மூலம் குறைந்தபட்சம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் இந்தக் கொள்கையின் குறிக்கோள்,” என அவர் தெரிவித்தார்.
இந்தக் கொள்கையின் மூலம், 25 கோடி ரூபாய் முதலீடு செய்யும் சிறு நிறுவனங்களுக்கும், விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களுக்கும் பெரும் ஊக்கம் வழங்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். “இளம் தலைமுறையினர் விண்வெளி தொழில்நுட்பம் (ஸ்பேஸ்டெக்) மற்றும் ஸ்பேஸ் ஏஜ் நிறுவனங்களை உருவாக்குவதற்கு இது மிகப்பெரிய அறிவிப்பாக அமையும். உலக அளவிலான தொழில் முனைவோர் இனி தமிழ்நாட்டை நோக்கி வருவார்கள்,” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் போன்ற தென் தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கு இந்தக் கொள்கை பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார். குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளம் அமைக்கப்படுவது, இப்பகுதியில் விண்வெளி தொழில்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு, ஏற்கனவே தொழில்துறையில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. விண்வெளி தொழில்நுட்பத்தில் உலகளாவிய போட்டி அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கொள்கை தமிழ்நாட்டை விண்வெளி தொழில்களுக்கான மையமாக மாற்றுவதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றுவதற்கு இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள விண்வெளி தொழில் கொள்கையை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ’எக்ஸ்’ பதிவில் கூறியுள்ளதாவது:-
தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலினின் மருமகன் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கியதில் இருந்து நேற்று வெளியிடப்பட்ட தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்தின் நிழல் முதல்வர் திரு.சபரீசன், 22.07.2024 அன்று இணைக்கப்பட்ட வானம் ஸ்பேஸ் எல்.எல்.பி. நிறுவனத்தின் நியமிக்கப்பட்ட பங்குதாரராக உள்ளார். இந்த நிறுவனம் 20% மூலதன மானியத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தத் தொழில்துறை கொள்கையை கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை என்று அழைப்பது பொருத்தமானதாக இருக்கும்.
முதலீடுகள் இல்லாததால் மாநிலம் தவித்து வருகிறது, நிதியாண்டு 25 இல் புதிய முதலீடுகளுக்காக போராடி வருகிறது, இதோ ஒரு சர்வாதிகார அரசு அவரது குடும்பத்திற்கு பயனளிக்கும் வகையில் ஒரு தொழில்துறை கொள்கையை வெளியிடுகிறது. அவமானம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.