நியோமேக்ஸ் குழுமம் தொடர்புடைய ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!

நியோ மேக்ஸ் குழுமம் தொடர்புடைய ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக நியோ மேக்ஸ் பிராப்பர்டீஸ் குழுமத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கி உள்ளது அமலாக்கத்துறை.

மதுரையை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு முழுவதும் நியோமேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன. இந்த நிதி நிறுவனத்தின் இயக்குநர்களாக வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் செயல்பட்டனர். நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதம் 12% முதல் 30% வரை வட்டி தருவதாகவும், இரண்டரை முதல் 3 ஆண்டுகளில் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாக தரப்படும் எனக் ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை ஈர்த்தனர். இதை நம்பி பலர் பல கோடிக்கு முதலீடுகளை செய்தனர். ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டன. நியோ மேக்ஸ் நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிறுவனம் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. ஏற்கெனவே 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். 600 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.