அரசியலமைப்பு சட்டத்தை விட பெரியவர்கள் என யாரும் கிடையாது: திருச்சி சிவா!

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இந்த உத்தரவின்போது குடியரசுத் தலைவர் பற்றி நீதிமன்றம் தெரிவித்திருந்த கருத்துக்கு எதிராக குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் காட்டமாக சில கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு திமுக எம்பி திருச்சி சிவா கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஜெகதீப் தன்கர் கருத்துகள் நெறிமுறையற்றவை என விமர்சித்துள்ள திருச்சி சிவா, அரசியலமைப்பு சட்டத்தை விட பெரியவர்கள் என யாரும் கிடையாது என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து திருச்சி சிவா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

இந்திய அரசியலமைப்பின்படி அதிகராங்கள் நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை என பிரிக்கப்பட்டிருக்கின்றன. இவை தங்களுக்கு என தனித்தனி அதிகாரத்தை கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் மற்ற அமைப்பின் அதிகாரங்களில் தலையீடு செய்யாமல் செயல்படுவது அவசியம். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக நிற்கும் அமைப்புதான் அரசியலமைப்பு. இதுதான் மிகவும் உட்சபட்சமான அமைப்பு.

சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பு கவனம் பெற்றிருந்தது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் காலத்தாமதப்படுத்துவது தொடர்பாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தியிருந்தது. அரசு அதிகாரியாக இருந்தாலும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை காலவரையறையின்றி நிறுத்தி வைக்க முடியாது. இது அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது ஆகும் என்று கூறியிருந்தது. இப்படியான தீர்ப்பின் மூலம் ஆளுநரும், குடியரசுத் தலைவரும் சட்டத்தை கடைப்பிடித்தாக வேண்டிய அவசியம் இருப்பதை நீதிமன்றம் உறுதி செய்தது.

இதற்கு எதிராக குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ள கருத்துக்கள் நெறிமுறையற்றவை. அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி குறைத்து மதிப்பிட முடியாது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக ஜக்தீப் தன்கர், “நீங்கள் குடியரசுத் தலைவருக்கு உத்தரவிடக்கூடாது. அது ஜனநாயக முறையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்களை அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142 என்பது ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணுகுண்டை போல இருக்கிறது. இது நீதிமன்றத்திற்கு 24*7 நேரமும் கிடைக்கும் ஆயுதம் போல இருக்கிறது. டெல்லியில் கடந்த மார்ச் மாதம் 14-15ம் தேதி நீதிபதி யச்வந்த் வர்மாவின் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் விசாரணை மெத்தனமாக இருக்கிறது. இதுவே சாதாரண நபர் ஒருவரின் வீட்டில் கைப்பற்றப்பட்டிருந்தால் விவகாரம் வேறு மாதிரியாக வெடித்திருக்கும். இந்தியாவில் குடியரசுத் தலைவர் மீதும் ஆளுநர் மீதும் மட்டும்தான் வழக்குப்பதிவு செய்ய முடியாது. ஆனால் நீதிபதிகள் மீதும் வழக்குப்பதிவு செய்ய தயங்குவது ஏன்? நீதிமன்றம் சட்டங்களை எழுதுகிறது. அதே நேரம் நிர்வாகத்தையும் செய்கிறது. ஆனால் அதற்கு எந்த பொறுப்பும் கிடையாது. இது ஜனநாயகத்திற்கும் மிகவும் ஆபத்தானது” என்று தன்கர் விமர்சித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.