முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை: வானதி சீனிவாசன்!

அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்ட பிறகு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை. இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை யார் பிரிக்க நினைத்தாலும் அவர்களை தமிழ்நாட்டு மக்கள் விட மாட்டார்கள். மத்திய அரசும் விடாது. என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக வலுவான கூட்டணியை தொடரும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளனர். இதுகுறித்து அரசியல் ரீதியான காரசார விவாதம் தொடங்கிவிட்டது. நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாஜவையும், மத்திய அமைச்சர் அமித்ஷாவையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நடந்த அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘மத்திய அரசு ஏற்படுத்தும் தடைகளை சட்டபூர்வமாக ஒவ்வொன்றாக உடைப்போம். மற்ற மாநிலங்களைப் போல ரெய்டுகளால் கட்சிகளை உடைக்கும் பார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது. இங்குள்ள சிலரை மிரட்டி கூட்டணி வைத்துள்ள நீங்கள் ஜெயிக்க முடியுமா? எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது. டெல்லி ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது. அப்படியொரு தனித்தன்மை கொண்டவர்கள் நாங்கள். எங்க தமிழ்நாடு டெல்லிக்கு எப்பவும் அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்.’ என தன்னிலை மறந்து பேசியிருக்கிறார். அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்ட பிறகு ஸ்டாலினுக்கு ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை என்பதை, பொன்னேரியில் அவரது பேச்சு உறுதிப்படுத்துகிறது.

அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்றால், அதுபற்றி ஸ்டாலின் ஏன் கவலைப்பட வேண்டும். காங்கிரஸின் கூட்டணிக்காக பிரணாப் முகர்ஜியிடமும், குலாம்நபி ஆசாத்திடமும், கைகட்டி நின்றவர்கள் யார். 2011 ஆம் ஆண்டு அண்ணா அறிவாலயத்தின் மாடியில் அன்றைய காங்கிரஸ் அரசு நடத்திய ரெய்டுக்கு அஞ்சி நடுங்கி, காங்கிரஸுக்கு 63 தொகுதிகளை வாரி வழங்கியவர்கள் யார்.. இந்திரா காந்திக்கு அஞ்சி நடுங்கி கச்சத்தீவை தாரைவார்க்க உதவியது யார் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. அதை தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள்.

இந்தியா என்பது ஒரே நாடு. இந்தியா என்ற நாடு உருவான பிறகே, நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இப்போதும் பிரிக்கப்பட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் கட்சியோடு, அரசியல் ரீதியாக மாநிலத்தை ஆளும் கட்சி முரண்படலாம். ஆனால், மத்திய அரசோடு, மாநில அரசோடு மோதுவது ஆரோக்கியமானது அல்ல. மத்திய உள்துறை அமைச்சர் தமிழ்நாடு வந்து சென்ற பிறகு, அவரைப் பற்றியே முதலமைச்சர் ஸ்டாலின் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர், இந்தியாவின் உள்துறை அமைச்சர். தமிழ்நாட்டையும் சேர்த்துதான் அவர் ஆண்டு கொண்டிருக்கிறார். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவின் 28 மாநிலங்களும், 8 யூனியன்பிரதேசங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. எப்போதும் அப்படித்தான் இருக்கும். ஸ்டாலின் வாய் சவடால் விடலாம். அதனால் எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை. இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை பிரிக்கலாம் என யார் நினைத்தாலும் அவர்களை தமிழ்நாட்டு மக்களும் விட மாட்டார்கள். மத்திய அரசும் விடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.