திமுக அரசு பாஜக தலைவர்களின் செல்போன் பேச்சை ஒட்டுக் கேட்கிறது: நயினார் நாகேந்திரன்!

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு பாஜக தலைவர்களின் செல்போன் பேச்சை ஒட்டுக் கேட்கிறது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-

என் போனை எல்லாம் டேப் செய்றாங்க.. யார் யார், யாருகிட்ட பேசுறாங்க.. என்ன என்ன பேசுறாங்க.. அதை வைத்து என்ன பண்ணலாம் என்கிற அளவுக்கு நம்மை திமுக அரசு கண்காணித்துக் கொண்டே இருக்கிறது.. அதனால் நம்ம ஆட்கள் அனைவரும் எச்சரிக்கையாக செல்போனில் பேசினாலே ரொம்ப நல்லது. அந்த அளவுக்கு திமுக அரசு நம்மை கண்காணித்துக் கொண்டே இருக்கிறது.

தமிழக சட்டசபைக்குள் இரட்டை இலக்கத்தில் செல்வோம் என்று சொன்னோம். என்னைப் பொறுத்தவரையில் இரட்டை இலையோடு அதிகப்படியான சட்டசபை உறுப்பினர்கள் உள்ளே செல்வோம் என்கிறேன். ஏனெனில் தமிழ்நாட்டில் மிகப் பெரிய மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. இங்கே மக்களுக்கு எதிரான ஆட்சி நடைபெறுகிறது. அதனால் ஆட்சிக்கு எதிரான போக்கு இங்கே இருக்கிறது. இதனை எல்லாம் புரிந்து கொண்டுதான் முதல்வர் ஸ்டாலின், அவுட் ஆப் கண்ட்ரோல் என பேசிக் கொண்டிருக்கிறார். 2026-ம் ஆண்டு அவுட் ஆப் கண்ட்ரோல் ஆகப் போவதே திமுக அரசாங்கம்தான்.

இன்னொன்றையும் முதல்வர் ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்.. அதாவது எத்தனை ‘ஷா’ வந்தாலும் (மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா) ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் ஸ்டாலின். உண்மையிலே என்ன நடந்தது? அந்த ‘ஷா’ வந்தார்.. ஹரியானா மாநிலத்துக்கு போனார் அந்த ஷா. ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்தது. அந்த ஷாதான் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியை உருவாக்கிக் கொண்டு வந்தார். அதன் பின்னர் டெல்லி பட்டணத்துக்குப் போனார் அந்த ஷா.அங்கேயும் பாஜக ஆட்சியைக் கொண்டு வந்தார். இப்போது தமிழ்நாட்டுக்கு அந்த ஷா வந்து உள்ளார். அந்த ஷாதான், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியையும் கொண்டு வருவார்.

ஆகவே நாம் செய்ய வேண்டிய பணி என்ன என்பதைத்தான் நாம் சிந்திக்க வேண்டும். பாஜகவை இங்கே வலுப்படுத்தியது நமது முன்னாள் மாநிலத் தலைவர், வானதி சீனிவாசன், சிபி ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன், எல். முருகன் போன்றவர்கள்தான். என் மக்கள் என் யாத்திரை மூலம் மாண்புமிகு அண்ணாமலை இவ்வளவு பேர் கைதட்டும் நிலைமையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். இவர்களை விட இனிமேல்தான் நமக்கு பொறுப்பு உள்ளது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.