உத்திரபிரதேசத்தை சேர்ந்த அகில இந்திய முஸ்லீம் ஜமாஅத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். அதற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தும் தனது கண்டனத்தை பதிவு செய்து உள்ளது. வலதுசாரிகளின் கைகூலியாக திகழும் இவர் தமிழ்நாடு அரசியலில் ஏன் மூக்கை நுழைக்கிறார். கூட்டிக்கழித்து பாருங்கள் பாசிச வாதிகளின் பங்கு புரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 7ம் தேதி ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற தொழுகையிலும் கலந்து கொண்டார். அன்று நடந்த சம்பவங்களை கூறி, அகில இந்திய முஸ்லிம் ஜமாத் என்ற அமைப்பின் தலைவர் சகாபுதீன் ராஸ்வி விஜய்க்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறுகையில், “தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ள விஜய், தனது சினிமா பிரபலத்தை அரசியலுக்கு பயன்படுத்த முயல்கிறார். திரைத்துறைப் பயணத்தில் தனது படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தவர் விஜய். இதனால், அவரோடு இஸ்லாமியர்கள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம். விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம். குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இஃப்தார் விருந்துக்கு அழைத்து வந்து அதனை அவமதித்து பாவம் செய்துவிட்டார்” என்று கூறியிருந்தார்.
இதனிடையே தமிழ்நாடு முழுக்க தவெக சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில், வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற அவைகளில் சட்டமாக நிறைவேறியபோது விஜய் அதை கடுமையாக கண்டித்து அறிக்கையும் வெளியிட்டார். அதேபோல் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்தசூழலில் விஜய்க்கு எதிராக இந்திய முஸ்லிம் ஜமாத் என்ற அமைப்பின் தலைவர் சகாபுதீன் ராஸ்வி வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சகாபுதீன் ராஸ்விக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி கூறுகையில், “நடிகர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்த அகில இந்திய முஸ்லீம் ஜமாஅத்தின் தலைவர் என்று தன்னை சொல்லிக்கொள்கின்ற இந்த சகாபுதீன் ராஸ்வி யார் தெரியுமா..? பாஜகவின் அகண்ட பாரதம் கனவை ஆதரிக்கும் நபர். ஒன்றிய அரசின் CAA சட்டத்தை வரவேற்ற நபர். வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை ஆதரிக்கும் நபர். வலதுசாரிகளின் கைகூலியாக திகழும் இவர் தமிழ்நாடு அரசியலில் ஏன் மூக்கை நுழைக்கிறார். கூட்டிக்கழித்து பாருங்கள் பாசிச வாதிகளின் பங்கு புரியும்” என்று கூறியுள்ளார்.