இந்திய அரசுடன் கூட்டணி வைத்து ஆட்சி செய்தவர்கள் மாநில தன்னாட்சி பேசுவது முரண்பாடு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழர்களுக்கு தனித்தன்மை இருப்பதாகக் கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். “தமிழகத்துக்கு என்ன தனித்தன்மை இருக்கிறது? ஊழல் மற்றும் லஞ்சத்தில் முதலிடத்தில் இருப்பது தனித்தன்மையா? கோயில்களில் எல்லோரும் ஒன்றாக வழிபட முடியாதது தனித்தன்மையா?” என்று வினவினார். மாநில உரிமைகளைப் பறித்தெடுத்ததாக காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளை விமர்சித்த அவர், இந்திய அரசுடன் கூட்டணி வைத்து ஆட்சி செய்தவர்கள் மாநில தன்னாட்சி பேசுவது முரண்பாடு எனக் குறிப்பிட்டார்.
இந்தியை திணித்ததற்கு எதிராக தமிழர்கள் மட்டுமே போராடியதாகவும், ஆனால் அதே கட்சிகள் பதவி மற்றும் தேர்தல் வெற்றிக்காக இந்தியை திணித்தவர்களுடன் கூட்டணி வைத்ததாகவும் சாடினார். “வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்ற முழக்கத்தை வெறும் வார்த்தைகளாகக் கருதி, தமிழ்ச் சமூகம் இப்போது அறிவு தெளிவு மற்றும் விழிப்புணர்வுடன் எழுந்து வருவதாகவும் கூறினார்.
வக்பு சட்டம் தொடர்பாக சீமான், இஸ்லாமியர்களால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைகளை அவர்களே நிர்வகிக்க வேண்டும் என்றார். “வக்பு அறக்கட்டளையில் இரண்டு இந்துக்கள் நிர்வாகியாக இருக்கலாமா? அப்படியானால், திருப்பதி, பூரி ஜெகநாதர், ஐயப்பன் கோயில்களில் இரண்டு இஸ்லாமியர்கள் அல்லது கிறிஸ்தவர்களை நிர்வாகியாக நியமிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டு கோயில்களின் சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அறநிலையத்துறை வருவாய் கணக்குகள் வெளிப்படையாக இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.
2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து பேசிய சீமான், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று உறுதியளித்தார். “கூட்டணி ஆட்சி, தலைமை பதவி உள்ளிட்டவை தேர்தல் அரசியல் செய்பவர்களுக்கு தேவை. நாங்கள் மக்களுக்காக மக்கள் அரசியல் செய்கிறோம். ஜல்லிக்கட்டு, டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டங்கள் மக்களின் வெற்றி” என்றார்.
கட்சி அங்கீகாரம் மற்றும் சின்னம் தொடர்பாக, தேர்தல் ஆணையம் இழுத்தடிப்பதாகவும், இருப்பினும் இரண்டு வாரங்களில் சின்னம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பாஜக, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகளை விமர்சித்த அவர், “2006-ல் கருணாநிதி கூட்டணி ஆட்சியை ஏற்கவில்லை. ஆனால், மத்தியில் கூட்டணி ஆட்சியில் பதவி வாங்குவது கூட்டணி தர்மமா?” என்று கேள்வி எழுப்பினார்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், சாட்டை துரைமுருகனின் YouTube சேனல் தொடர்பாக எழுந்த குழப்பங்கள் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசினார். அவர் வெளியிட்ட அறிக்கையில், சாட்டை துரைமுருகனின் யூடியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அந்த சேனலில் வெளியாகும் தகவல்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்துகளை பிரதிபலிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தி இருந்தார்.
இது குறித்து பேசிய சீமான் “அது தம்பியின் தனிப்பட்ட வலையொலி, அவர் எனக்கு தெரியாமலா பேசுகிறார் என்று எல்லோரும் கேட்கிறனர். என் பக்கத்தில் நிற்கும் அவர் பேசும் கருத்து கட்சியின் கருத்தாக பார்க்கப்படுகிறது. எல்லோரும் உங்களுக்கு தெரியாமலா அவர் பேசுகிறார் என்கிறார்கள். உண்மையிலேயே அது பற்றி எனக்கு தெரியாது. அவருக்கு சொந்தமாக கருத்து வைத்து உள்ளார். அந்த கருத்தை வலையொலியில் பதிவு செய்கிறார். அதை தெளிவு செய்யவே அந்த அறிக்கையை கொடுக்க வேண்டியது ஆயிற்று. தற்போது குழப்பம் இல்லை” என சீமான் தெரிவித்தார்.