பிஜு ஜனதா தளத்தின் தலைவராக நவீன் பட்நாயக் தொடர்ந்து 9-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக், கடந்த 1997 -ம் ஆண்டு கட்சித் தொடங்கப்பட்டதில் இருந்து கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். கடந்த 2020 பிப்ரவரியில் 8 முறையாக கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நவீன் பட்நாயக், தற்போது மீண்டும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வியாழக்கிமை நடைபெற்றது. புவனேஸ்வரில் உள்ள சங்கா பவனில் நவீன் பட்நாயக் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் ஒருவர் மட்டுமே தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக நவீன் பட்நாயக் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கட்சி சார்பில் இன்று(சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நவீன் பட்நாயக்கைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்து தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
மார்ச் 5, 2000 முதல் ஜூன் 12, 2024 வரை 24 ஆண்டுகள் தொடர்ந்து ஒடிசாவின் முதல்வராக நவீன் பட்நாயக் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.