விஸ்வகர்மா திட்டம் மூலம் மத்திய பாஜக அரசு குலத் தொழிலை ஊக்குவிக்க பாடுபடுகிறது: மு.க.ஸ்டாலின்!

“விஸ்வகர்மா திட்டம் மூலம் மத்திய பாஜக அரசு குலத் தொழிலை ஊக்குவிக்க பாடுபடுகிறது. அந்தத் திட்டத்தில் மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள வலியுறுத்தினோம். ஆனால் அதை மத்திய அரசு ஏற்கவில்லை. எனவே,அத்திட்டத்தை எதிர்க்கிறோம்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கைவினைத் திட்டத்தை இன்று (ஏப்.19) தொடங்கி வைத்தார். இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

பாஜக அரசு கடந்த 2023-ம் ஆண்டு ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதன் பெயர் என்ன தெரியுமா? “விஸ்வகர்மா திட்டம்” 18 வகையான கைவினைக் கலைஞர்களுக்கு, திறன் பயிற்சி வழங்கி, மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டம் என்று சொன்னார்கள்.

நம்மை பொறுத்தவரைக்கும், எந்தத் திட்டமாக இருந்தாலும், அது சமூகநீதியை, சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற நோக்கத்துடன் இருக்க வேண்டும். ஆனால், அந்த விஸ்வகர்மா திட்டம் அப்படியான திட்டம் இல்லை. அதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்தத் திட்டத்தின்கீழ் ஒருவர் பயன்பெற வேண்டும் என்றால், அந்த விண்ணப்பதாரர், அவருடைய குடும்பம் காலங்காலமாக செய்து கொண்டு வருகின்ற தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. இது சாதிய பாகுபாடுகளை, குலத்தொழில் முறையை வெளிப்படையாகவே ஊக்குவிக்கிறது என்று சொல்லி நாம் கடுமையாக எதிர்த்தோம்.

அதுமட்டுமல்ல, விண்ணப்பித்தவர்களுக்கான குறைந்தபட்ச வயது 18 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை பார்த்து எனக்கு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் உண்டானது. மத்திய பாஜக அரசு குலத் தொழிலை ஊக்குவிக்க பாடுபடுகிறது. குடும்பத் தொழிலில் பயிற்சி கொடுத்து, அவர்கள் வெளி உலகத்தையே பார்க்க கூடாது என்று பாஜக நினைக்கிறது. அதுவும், சாதிய வேறுபாடுகள் நிறைந்த இந்திய சமூகத்தில், இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? இதை மனசாட்சி உள்ள ஒருவர் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?

அதுவும், 1950-களிலேயே குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துக் களம் கண்ட தமிழ்நாடு இதை அனுமதிக்குமா? அந்த உணர்வோடுதான், தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த, மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள வலியுறுத்தி, பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். தகுதியான எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் . விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18-லிருந்து 35-ஆக உயர்த்தவேண்டும். கிராமப்புறங்களில், பயனாளிகளை சரிபார்க்கும் பொறுப்பை கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் இருந்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாற்றவேண்டும்.

ஆனால், மிக மிக முக்கியமான இந்த மூன்று மாறுதல்களையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். எந்த திருத்தமும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால்தான், பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவத்தில் தமிழக அரசு செயல்படுத்தாது என்று மத்தியில் இருக்கக்கூடிய MSME துறையின் அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாகவே இதை நாங்கள் தெரிவித்துவிட்டோம்.

அதே நேரத்தில், கைவினைக் கலைஞர்களுடைய வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்காக, சாதிய அடிப்படையில், பாகுபாடு காட்டாத ஒரு திட்டத்தை உருவாக்க நாங்கள் முடிவு செய்தோம். அதன்படி உருவானதுதான் இந்த கலைஞர் கைவினைத் திட்டம். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில், 18 தொழில்கள்தான் இருக்கிறது. ஆனால், கலைஞர் கைவினைத் திட்டத்தில் 25 வகையான தொழில்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசுத் திட்டத்தில், விண்ணப்பதாரர் அவருடைய குடும்பத் தொழிலை மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால், நம்முடைய திட்டத்தில் விரும்பிய எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

கலைஞர் கைவினைத் திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 35-ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறோம். அதனால், கல்லூரிக்கு செல்கின்ற வயதில், குடும்பத் தொழிலை பார்த்தால் போதும் என்று எந்த மாணவரும் நினைக்காமல் இருப்பதை உறுதி செய்திருக்கிறோம். இந்தத் திட்டத்தில், 50 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. விஸ்கர்மா திட்டத்தில் மானியம் கிடையாது. இதுவரை 24 ஆயிரத்து 907 விண்ணப்பங்கள் வந்திருக்கிறது. வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 8 ஆயிரத்து 951 பயனாளிகளுக்கு 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு இன்றைக்கு மாபெரும் வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்று சொன்னால், பெரிய நிறுவனங்களால் மட்டுமே இந்த வளர்ச்சி வந்துவிடவில்லை. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களாலும்தான் இந்த வளர்ச்சியை நாம் சாத்தியமாக்கி இருக்கிறோம். இந்தத் துறைக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர் தா.மோ. அன்பரசன் இந்தத் துறையை சிறப்பாக வளர்த்தெடுத்துக் கொண்டு வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு MSME நிறுவனங்களை அவர் வளர்த்தெடுத்திருக்கிறார். அவை பெருந்தொழில்களுக்கு துணையாக இருந்து நாட்டின் ‘இன்க்ளூசிவ்’ மற்றும் ‘ஆல்-ரவுண்ட்’ சமூக வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிக்கிறது. உள்ளூர் வளங்களை பயன்படுத்தி அந்தப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதால், மக்கள் வேலை தேடி தொலைதூரங்களுக்கு இடம் பெயர்வது பெருமளவு தடுக்கப்படுகிறது.

MSME தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில், தமிழ்நாடு இந்தியாவிலேயே 3-வது இடத்தை வகித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில், சுமார் 33 லட்சம் MSME தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மொத்த எண்ணிக்கையில் இது 9.4 விழுக்காடு. அனைத்து மாவட்டங்களிலும், தொழில் முயற்சிகளை பரவலாக நாம் தொடங்கி வருகிறோம். அந்த வகையில்தான் கலைஞர் கைவினைத் திட்டமும் முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

முதல்வர் வெளிட்ட 5 அறிவிப்புகள்:

* அறிவுசார் சொத்துரிமையான ‘புவிசார் குறியீடு’ பெறுவதற்காக வழங்கப்பட்டு வரும் மானியம் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

* அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்படும் வாகன மற்றும் பொறியியல் உதிரி பாகங்கள் தயாரிக்கின்ற தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அளவியல் மற்றும் உலோகவியல் ஆய்வகங்கள் ஐந்து கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

* தொழில் நிறுவனங்கள் மிகுதியாக இருக்கின்ற காஞ்சிபுரம், பழந்தண்டலத்தில் சாலை கட்டமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் அமைக்க ஐந்து கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

* காக்களூர் உற்பத்தியாளர்கள் தொழிற்பேட்டையில், தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி மையம் மற்றும் இயந்திர தளவாடங்கள் கூடிய பொது வசதி மையம் மூன்று கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

* குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டில் வர்த்தக கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்க வழங்கப்படக்கூடிய காட்சிக்கூட கட்டணத்துக்கான நிதியுதவி, ஒரு லட்சம் ரூபாயில் இருந்து இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், ஆகிய அறிவிப்புகளையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.