தனது செல்போன் உரையாடல்கள் திமுக அரசால் ஒட்டுக் கேட்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்த நிலையில் என்னுடைய தொலைப்பேசி அழைப்புகளும் தான் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:-
பாமகவில் ராமதாஸ் – அன்புமணி, மதிமுகவில் வைகோ – துரை வைகோ என அக்கட்சிகளில் நடைபெற்று வரும் பிரச்சினைகளால் நாட்டுக்கும், மக்களுக்கும் பிரச்சினை இல்லை. எந்தக் கட்சியில் தான் பிரச்சினை இல்லாமல் இருக்கிறது. அது அவர்களது கட்சி பிரச்சினை. அவர்களே பேசி சரி செய்து கொள்வார்கள். இதைப்பற்றி நாம் பேசுவது பண்பாடற்ற செயலாகும்.
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தனது செல்போன் உரையாடல்களை எல்லாம் திமுக அரசால் ஒட்டுக் கேட்கப்படுவதாக சொல்லியிருக்கிறார். என்னுடைய செல்போன் உரையாடல்கள் 20 ஆண்டுகளாக ஒட்டுக் கேட்கப்படுகின்றன. இந்திய அளவில் ஒட்டுக்கேட்கப்படும் 50 தலைவர்களில் நானும் ஒருவன். இது அநாகரீகமானது. இந்நாட்டில் தனி மனித சுதந்திரம் என்பது இல்லை.
நீட் தேர்வால் உயிரிழந்தவர்களுக்கு அதிமுக சார்பில் கண்ணீர் அஞ்சலி போராட்டம் நடத்தியுள்ளனர். தேர்தல் திருவிழா வரும்போது இதுபோன்ற நாடகங்கள் நடப்பது தான். திமுக ஆட்சியில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக பெருமையுடன் சொல்கிறார் முதல்வர். இதில் என்ன பெருமை இருக்கிறது. இதன்மூலம் ஒரு லட்சம் பிரச்சினைகளை மக்களுக்கு தந்திருக்கின்றனர்.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பரந்தூர் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 1000 நாளை இந்தப் போராட்டம் கடந்துள்ளது. இந்த விவகாரத்தில் நான் தான் மக்களுடன் நின்று முதல்முறையாகக் குரல் கொடுத்தேன். 1000 நாட்களாக அவர்கள் போராடுவதாகச் சொன்னீர்கள். அவர்களைச் சந்தித்தபோது, நான் உயிருடன் இருக்கும் வரை அங்கு விமானநிலையம் வராது எனச் சத்தியம் செய்து கொடுத்தேன். பேனா சிலை, 8 வழிச்சாலை, டங்ஸ்டன் விவகாரத்தில் நடந்ததே தான் இதிலும் நடக்கும். பரந்தூர் விமான நிலையம் கட்ட விட மாட்டேன்.
டங்ஸ்டன் போராட்டம் நடந்த போது நான் அங்குள்ள குலசாமி முன்பு போய்.. நான் இருக்கும் வரை கல்லைக் கூட பெயர்க்க விட மாட்டேன் என்றேன். அதுபோலத் தான் நான் விமானநிலையத்திற்கு எதிராகப் போராடும் மக்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன். நான் இருக்கும் வரை விமானநிலையம் கட்ட முடியாது.. கட்டவும் விட மாட்டேன். ஒரு படத்தில் வரும் வசனத்தை போலத் தான்.. என்னைத் தாண்டி முடிந்தால் தொடு.! ஏற்கனவே இருக்கும் விமானநிலையத்தில் முதலில் பறக்க விமானம் இருக்கா? சென்னை விமான நிலையத்தில் ஒரே ஒரு நிறுவனம் மட்டும் தான் விமானத்தை இயக்குகிறது. 5000 ஏக்கரில் நீங்கள் விமான நிலையத்தில் விமானத்தை இயக்கப்போகும் முதலாளி யார்! அந்த விமான நிலையம் மக்களுக்காகவே இல்லை அந்த முதலாளிக்காகவா! விமான நிறுவனமே இல்லை நீங்கள் பறப்பது குறித்து மட்டுமே கவலைப்படுகிறீர்கள்.. பசியோடு இருக்கும் பல கோடி மக்கள் குறித்து எந்தவொரு கவலையும் இருப்பதில்லை.
தற்போது தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியா முழுக்க ஒரே ஒரு விமான நிறுவனமே இருக்கிறது. இதனால் அவர்கள் சொல்வது தான் கட்டணம்.. அவர்கள் எடுப்பது தான் நேரம் என இருக்கிறது.. ஏகப்பட்ட தாமதம் இருக்கும். அரசுக்குச் சொந்தமாக விமான நிறுவனம் இல்லாத போது.. விமான நிலையம் மட்டும் எதற்காக..! அங்கு விமான நிலையம் தேவையில்லை என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம்.. ஆகாயத்தில் பறப்பது வளர்ச்சி தான்.. ஆனால் அப்படிப் பறந்து செல்பவருக்கும் பூமியில் இருந்தே உணவு செல்ல வேண்டும். சந்திரனுக்கு சந்திரயான் அனுப்புவது வளர்ச்சி தான் என்றாலும் அந்த ஆய்வாளர்களுக்கு உணவை எங்கள் விவசாயிகள் தான் அனுப்புகிறார்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு பேச வேண்டும். ஆகாயத்தில் பறந்தால் பசியை மறந்துவிடுவார்களா!
இப்போது தேர்தல் வருவதால் கொஞ்ச நாள் இது குறித்துப் பேச மாட்டார்கள். ஆனால், தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஆரம்பிப்பார்கள். அங்கு விமான நிலையத்தைக் கட்ட முடியாது.. கட்ட மாட்டார்கள்.. அங்கு விமான நிலையம் தேவையும் இல்லை. தற்போதுள்ள சென்னை விமான நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லை.. வசதியுடன் கூடிய வேறு ஒரு விமான நிலையம் வேண்டும் என யாராவது ஒருவர் சொல்லி இருக்கிறாரா.. போராட்டம் நடத்தி இருக்கிறாரா.. அதிகபட்சம் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்றும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என மட்டும் சொல்லியிருப்பார்கள். வசதி பத்தவில்லை எனச் சொல்லியிருக்க மாட்டார்கள்.
அதேபோலத் தான் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போதிய வசதி இல்லை என யாராவது ஒரு வெளியூர் பயணி சொல்லி இருக்கிறாரா.. அப்போ ஏன் கிளாம்பாக்கத்தில் பல கோடி செலவழித்து புதிய பேருந்து நிலையத்தைக் கட்டினீர்கள். ஊரில் இருந்து கிளாம்பாக்கம் வர ரூ.1000. அங்கிருந்து சென்னைக்குள் வர ரூ.1000 என்றே இருக்கிறது. இது சீரிஸயான பிரச்சினை. எங்கெல்லாம் காசு அடிக்கலாம் எனப் பார்த்துப் போட்டு வருகிறார்கள். மேம்பாலம் கட்டினால் அதில் ரூ.100 கோடி அடிக்கலாம்.. காலை உணவுத் திட்டம் எனச் சொல்லி பணம் அடிக்கலாம்.. காலை 7 நாளில் 5 நாள் உப்புமா போடுவது தான் திட்டமாம்” என்றார்.
விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் குறித்துப் பேசிய சீமான், “விசைத்தறி நெசவாளர்கள் போராட்டத்திற்கு இந்த அரசு செவி சாய்க்காது. அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்கள் போராட்டத்திற்கு எனது ஆதரவு இருக்கிறது. ஆனால், அவர்கள் பிரச்சினை சரியாக வேண்டும் என்றால் நான் அதிகாரத்திற்கு வர வேண்டும்.. அவர்களுக்கு நெசவாளர்கள், உழவன், மருத்துவர், போக்குவரத்து தொழிலாளி, மருத்துவர், ஆசிரியர், செவிலியர் என யாரைப் பற்றியும் கவலை இல்லை.. இவர்களுக்கு இனப்பற்று எல்லாம் இல்லை.. பணப்பற்று மட்டுமே இருக்கிறது. வேறு எதுவும் இல்லை. எனவே, இதைப் பற்றிப் பேசிக்கூடப் பலனில்லை.
கடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் சொல்கிறார். அது பெருமை இல்லை.. ஒரு லட்சம் பிரச்சினைகளை நீங்கள் தந்து இருக்கிறீர்கள் என அர்த்தம். மக்கள் கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார் என்பதையே இது காட்டுகிறது. தமிழகத்தில் இவ்வளவு பிரச்சினை இருக்கிறது.. இதில் என்ன பெருமை.. ஆனால், தமிழக முதல்வர் இதைப் பெருமையாகச் சொல்கிறார். மேலும், முதல்வராகும்போது முதல் கையெழுத்து என்ன என்பது குறித்த கேள்விக்கு அவர், மக்கள் அதிகாரம் கையில் வந்தால் முதலில் நான் முதல்வராகப் பொறுப்பேற்பதே முதல் கையெழுத்து என நகைச்சுவையாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “அதன் பிறகு 100 கையெழுத்துகளைப் போடுவேன். இந்த நாடு, இனத்தின் தலையெழுத்தை மாற்றும் 100 கையெழுத்துகளைப் போடுவேன். நேரம் வரும்போது அவை குறித்துச் சொல்வோம்” என்றார்.