நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று திமுக பொருளாளரும், அக்கட்சியின் மக்களவை குழு தலைவருமான டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டி.ஆர்.பாலு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக, நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
குஜராத்தில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் பற்றி நடைபெற்ற கருத்துருவாக்கமும், காங்கிரஸ் தொண்டர்களின் எழுச்சியும் பாஜகவை மிரள வைத்திருக்கிறது போலிருக்கிறது. கடந்த முறை சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றபோது அமலாக்கத் துறை மூலம் அம்மாநில காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தியது பாஜக அரசு. இப்போது குஜராத் எழுச்சிக்கு பிறகு, அதே பாணி அரசியலை கையிலெடுத்து, காங்கிரஸ் அகில இந்திய தலைவர்கள் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
வக்பு திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உறுதியாக நின்று, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வாக்களிக்க வைத்துள்ளதும், பாஜக அரசின் வயிற்றில் புளியை கரைக்கிறது. பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களை, தோல்விகளை, மக்களிடம் எடுத்து செல்கின்ற காங்கிரஸ் கட்சியை பார்த்து பாஜக மிரட்சியில் இருக்கிறது. அதனால்தான் அமலாக்கத் துறை காங்கிரஸ் கட்சியை சுற்றி சுற்றியே வந்து கொண்டிருக்கிறது. இப்போது அதன் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் விட்டு வைக்கவில்லை.
காங்கிரஸ் போன்ற பிரதான எதிர்க்கட்சியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள துணிச்சலற்ற பாஜக அரசு, இப்படி அமலாக்கத் துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை ஏவி விடுவது, ஜனநாயகத்தில் அருவருக்கத்தக்க அரசியல் மட்டுமல்ல, யாராலும் ஏற்று கொள்ள முடியாத அரசியல் பழிவாங்கும் செயலாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.