அதிமுக பாஜகவோடு கூட்டணி வைத்ததற்கு முதல்வர் ஸ்டாலின் பதற்றமடைகிறார். அதிமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும், இது எங்கள் உரிமை. நாங்க யாரோடு கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன என ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.21) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சி உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், ஐவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சித்திரைத் திருவிழாவில் வழங்கிய மோர், குளிர்பானத்தால் தான் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் கூறுகிறார். கோயில் திருவிழாவுக்கு பலரும் சென்ற நிலையில், உறையூர் மக்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டது ஏன்?, குளிர்பானம் தான் பிரச்சினை என்றால் பல பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு ஏன் பாதிப்பு இல்லை.
குடிநீரில் கழிவுநீர் வருவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புகார் வந்த உடனேயே, குடிநீரில் கழிவு நீர் கலப்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. பாதிக்கப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு குறித்து பல முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி தான். அதை தடுத்து நிறுத்த முயற்சித்தது அதிமுக. அதிமுக ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு வந்தது என திமுக தலைவர் மற்றும் அமைச்சர்கள் தவறான கருத்தை கூறி வருகிறார்கள். நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும் காங்கிரஸும் தான். இது மாணவர்களை பாதிக்கும், இளைஞர்களை பாதிக்கும் என அவர்களுக்கு தெரியாதா? . அதை தடுப்பதற்கு நாங்கள் (அதிமுக) கடுமையாக முயற்சி செய்தோம், ஆனால் முடியவில்லை.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றம் சென்று விட்டதால், நீட் தேர்வை அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும் தொடர்ந்து மத்திய அரசோடும், நீதிமன்றத்திலும் நாங்கள் வலியுறுத்தி கொண்டே இருந்தோம்.
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என முதல்வர் கூறினார். இன்று இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் நீட் தேர்வை ரத்து செய்திருக்கும் என கூறுகிறார். 2010 ஆம் ஆண்டு நீட் தேர்வு கொண்டு வரும்போதே, ஏன் ரத்து செய்யவில்லை. அப்போது, காங்கிரஸின் கூட்டாட்சி தான் நடந்தது. அப்போதும் நீட்டை ரத்து செய்திருந்தால், இத்தனை உயிர்களை நாம் இழந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது என திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். சட்டமன்றத்தில் இன்று முதல்வர் துடிதுடிக்க பேசுகிறார். யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி வைப்போம். திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்ற அடிப்படையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். முதல்வர் இவ்வாறு ஆதங்கப்படுவது, அதிர்ந்து போய் பேசுவதை பார்க்கின்ற போது பயம் வந்துவிட்டதாக தெரிகிறது. ஆட்சி மாற்றம் ஏற்படும், திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்படும் என அவருக்கு தெரிகிறது. 2026 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைக்கும்.
ஊழலைவிட மதவாதம் என்பது கொடுமையானது அல்ல என பாஜகவுடன் கூட்டணி வைக்கும்போது கருணாநிதியே கூறியிருக்கிறார். பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்த போது இனித்தது, இப்போது கசக்கிறதா?. முரசொலி மாறனை இலாகா இல்லாத அமைச்சராக ஒரு வருடம் வைத்திருந்தபோது, திமுகவுக்கு பாஜக நல்ல கட்சியாக தென்பட்டது; இப்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால், ஏன் என்று முதல்வர் கேள்வி கேட்கிறார். ஒரு விஷயம் திமுகவுக்கு சாதகமாக இருந்தால் அதை பாராட்டுவார்கள், அவர்களுக்கு பாதகமாக இருந்தால் அதை எங்கள் மீது பழி சுமத்துவார்கள், இதுதான் வாடிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.