இனி சிவன் ஆட்டம் இல்ல.. சீமான் ஆட்டம்: சீமான்!

நாம் தமிழர் கட்சி சீமான், “சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள், சீமான் ஆட்டம் எப்படி இருக்கிறது என்று இந்த தேர்தலில் பார்ப்பீர்கள்” என்று கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-

இந்தியாவில் சிறந்த மருத்துவ மாணவர்களை தேர்ந்தெடுக்கும் நீட் தேர்வை அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் நடத்துகிறது. ஒரு மாணவனுக்கான தேர்வைக் கூட நடத்த முடியவில்லை. நீங்கள் நாட்டுக்காக நல்ல தலைவரை எப்படி தேர்வு செய்வீர்கள். நீட் தான் வழியென்றால் பிளஸ் 1, பிளஸ் 2வை தூக்கிவிடுங்கள். நேரடியாக நீட்டுக்கு படிக்கட்டும். பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பவர்களுக்கு கூட மருத்துவ கல்விக்கான இடம் கிடைப்பதில்லை. எதுவுமே உருப்படியாகவில்லை. நீட்டில் வெற்றி பெற்று இடம் கிடைத்தாலும் அதே பழைய பாடம், அதே பேராசிரியர் தான் உள்ளனர். இதை வைத்து எப்படி சிறந்த மருத்துவரை உருவாக்க முடியும். எங்கள் பிள்ளைகள் மருத்துவம் படிக்க கூடாது.

இந்தியாவிலேயே நீட் தேர்வுக்காக இத்தனை பேர் உயிரிழந்துள்ளனரா. தேர்வு எழுத செல்லும் மாணவர்களின் தலை முடி, உடைகளை கிழிக்கிறீர்கள். வட இந்தியாவில் அவர்களை காப்பியடிக்க விடுகின்றனர். 700 பேர் எழுதிய தேர்வில் 800 பேர் தேர்ச்சியடைவது எப்படி. இங்கு 24 மருத்துவக் கல்லூரிகள் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டது. வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அங்கு இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் படிக்க முடியாமல், பிற மாநில மாணவர்கள் படிக்கிறார்கள். இவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்று திமுக காங்கிரஸ் எப்படி நீட்டை கொண்டு வந்தார்கள்.

இன்னும் 4-5 மாதங்கள் தான் இருக்கின்றன. பொறுத்திருந்து பாருங்கள் என் ஆட்டம் எப்படி இருக்கிறது என்று. சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள், சீமான் ஆட்டம் எப்படி இருக்கிறது என்று இந்த தேர்தலில் பார்ப்பீர்கள். வேறு மாதிரியான விதிகள் மற்றும் நுட்பங்களை வகுத்து என் தாய் நாட்டை சொர்க்கமாக மாற்றுவேன். உலகின் தலை சிறந்த நாடாக மாற்றிக் காட்டுவேன். நான் சொல்லும்போது நீங்கள் நம்புவதில்லை. எங்கள் ஆட்சி எப்படி இருக்கும் என்று காட்டுவேன். அவர் சொல்வது சரியாகதானே இருக்கிறது என்று உங்களுக்கு நம்பிக்கை வரும். அப்போது நீங்கள் ஆதரிப்பீர்கள். அதுவரை சற்று பொறுத்திருங்கள். எல்லாவற்றையும் சொல்ல முடியாது. நான் ஒன்று சொன்னால், அதை அவர்களாக செய்வதைபோல செய்து கொண்டிருக்கிறார்கள்.

முதன் முதலில் உலகில் அன்பு சோலை என்ற ஒன்றை உருவாக்கியது எங்கள் தலைவர் தான். போர்களில் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோரை பாதுகாக்க அன்பு சோலை நிறுவப்பட்டது. அதன் பிறகு இங்கு நாங்கள் தேர்தலின்போது, பிள்ளைகள் கைவிட்ட பெற்றோரை பராமரிக்க அன்பு சோலை நிறுவப்படும் என்று கூறினேன். இப்போது நிதி நிலை அறிக்கையில் இவர்கள் அன்பு சோலை அறிவித்துள்ளனர். இவ்வளவு காலமாக நீங்கள் என்ன செய்தீர்கள். திடீரென்று நாங்கள் சொன்னபடி தமிழில் அரசாணை என்கிறீர்கள். கொஞ்சம் காத்திருங்கள். எல்லாவற்றிலும் நாடகம் ஆடுகிறார்கள். மக்களின் ஓட்டைத் தவிர ஆட்சியாளர்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை.

உலகத்தின் 20 நாடுகள் ஒன்று திரண்டு நின்ற போது தன் நாட்டு மக்களை நம்பி படைதிரட்டி யுத்தம் செய்த தலைவன் பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள். எனக்கு ஒரு தலைவன்; எனக்கு ஒரு தத்துவம்; எனக்கு ஒரு நோக்கம்; எனக்கு ஒரு கொள்கை; மொழி- இனத்தை முன்னிறுத்தும் அரசியல்; வேளாண்மையை முன்னிறுத்தும் தற்சார்பு பசுமை பொருளாதாரம் என இருக்கிறது. இந்த கோட்பாடுகள் சரியானவை என நினைத்து எங்களுடன் இணைந்து நிற்க வந்தால் யோசிப்போம். அதுவும் இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து யாராவது கூட்டணிக்கு வந்தால் யோசிக்கலாம். ஆனால் யாரும் வரமாட்டார்கள். கூட்டணி என்றால் சீட்டு, நோட்டு (பணம்) வேண்டும் என்பர். என்னிடம் இந்த இரண்டுமே இல்லை. ஆகையால் கூட்டணி குறித்து கேள்விகளை கேட்காமல் விட்டுவிடுங்கள். இந்த கேள்விகளுக்கு நானும் பலமுறை பதில் அளித்துவிட்டேன். இவ்வாறு சீமான் கூறினார்.