இந்திய தேர்தல் ஆணையம் ‘சமரச’ அமைப்பாகிவிட்டது: ராகுல் காந்தி!

இந்திய தேர்தல் ஆணையம் சமரச அமைப்பாகிவிட்டது என்றும், அமைப்பில் மிகப் பெரிய தவறு உள்ளது என்றும் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பாஸ்டன் நகரில் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர், சமீபத்தில் நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மோசடி நடந்ததாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் துணை போனதாகவும் குற்றம் சாட்டினார்.

“மகாராஷ்டிராவில் உள்ள மொத்த மக்களின் எண்ணிக்கையை விட வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இது ஒரு உண்மை. மாலை 5.30 மணியளவில் தேர்தல் ஆணையம் எங்களுக்கு ஒரு புள்ளிவிவரத்தை வழங்கியது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் அதாவது இரவு 7.30 மணியளவில், 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது உண்மையில் சாத்தியமற்றது. தேர்தல் ஆணையம் சமரசம் செய்யப்பட்டுள்ளது என்பது எங்களுக்கு மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அமைப்பில் ஏதோ மிகப் பெரிய தவறு உள்ளது” என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு குறித்துப் பேசிய ராகுல் காந்தி, “அமெரிக்காவுடன் எங்களுக்கு (இந்தியாவுக்கு) ஒரு கூட்டுறவு உள்ளது. நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்று நம்புகிறோம்.” என்று கூறினார்.