காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-
மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், சுமார் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உதவித்தொகையை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தி சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான கொள்கை, ஸ்மார்ட் கார்டு, மூன்று சக்கர மோட்டார் வாகனம், வீட்டுவசதி வாரியத்தில் வீடுகள் ஒதுக்கீடு என தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாத திமுக அரசு, தங்களின் வாழ்வாதார பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அதிலும், 100 நாள் வேலைத்திட்டத்தில் 50 சதவிகிதம் பணி மற்றும் 4 மணி நேரம் என்று இருந்த வேலையை, 8 மணி நேரம் வேலை மற்றும் நாள் முழுவதும் பணித்தளத்தில் இருக்க வேண்டும் என மாற்றி உத்தரவு பிறப்பித்திருப்பது ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளுக்கும் திமுக அரசு இழைத்திருக்கும் மாபெரும் துரோகம் ஆகும்.
எனவே, காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.