ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-
பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வகையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தக் கொடூரச் செயலுக்குப் பின்னால் இருப்பவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்பிக்க மாட்டார்கள்! அவர்களின் தீய நோக்கம் ஒருபோதும் வெற்றி பெறாது. பயங்கரவாதத்திற்கு எதிராக நம்முடைய உறுதி தளராதது மட்டுமல்லாமல், இன்னும் வலுவடையும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக ஸ்ரீநகருக்குப் புறப்பட்டுச் செல்வதாகக் கூறியுள்ளார். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். பிரதமர் மோடிக்கு இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, தொடர்புடைய அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். பிரதமர் மோடி தற்போது சவுதி அரேபியாவில் உள்ளார். ‘ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலால் மிகுந்த வருத்தமடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க மாட்டார்கள், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும்’ என்று அவர் கூறினார்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது என்றும், காஷ்மீரில் சாதாரண நிலைமை உள்ளது என்ற அரசின் பொய்யான கூற்றுக்குப் பதிலாக, அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்தக் கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தது மற்றும் பலர் காயமடைந்தது மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் மனம் நோக வைப்பதாகும் என்று அவர் கூறினார்.