“தமிழக மின்வாரியத்தில் டோடெக்ஸ் முறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் அனைவருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த வேண்டும் என பாஜக மத்திய அரசு வற்புறுத்துவது, மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கம் கொண்டது. நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் மின்சார திருத்தச் சட்டத்தை (2020) மறைமுகமாக செயல்படுத்தும் திட்டமாகும் . டோடெக்ஸ் முறையில் மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் மின் நுகர்வோர்கள் தமிழ்நாட்டில் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் மூன்று கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவது முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் தனியார் நிறுவனமே அதன் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளும் அபாயம் உள்ளது. தற்போது மின் மீட்டர்கள் நல்ல நிலையில் இயங்கி வருகின்றன. இவைகளை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். இதனால் ஏற்கெனவே பெரும் கடன் சுமையால் திணறி வரும் தமிழ்நாடு மின்வாரியம் என்ன கதிக்கு ஆளாகும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்
தமிழகத்தில் உள்ள 3.40 கோடி மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தினால் சுமார் ரூபாய் 50, ஆயிரம் கோடி செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை அதானி, அம்பானி போன்ற பெரும் குழும நிறுவனங்கள் மட்டுமே முதலீடு செய்யும். இதன் மூலம் குழும நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெறுவதற்கு மத்திய அரசு வழிவகை செய்கிறது.
ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தினால் மீட்டருக்கான வாடகையை தனியார் நிறுவனத்திற்கு மின்வாரியம் செலுத்தும். நாளடைவில் மீட்டர் வாடகையை நுகர்வோரே நேரடியாக செலுத்த வேண்டிய நிலை உருவாகும். தற்போது மின் நுகர்வு நேரத்தில் அடர்த்தியான (peak hours) மின்பயன்பாட்டு நேரம், சாதாரண நேரம் என வகைப்படுத்தி வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு உச்ச பட்ச நேரம் என வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது, இனி வரும் காலங்களில் அனைத்து நுகர்வோர்களுக்கும் இந்த முறையை விரிவுபடுத்தும் திட்டமாகும்.
கொசுத் தொல்லை, அளவுக்கு மீறிய வெப்பம், காற்றோட்ட வசதி குறைவு போன்ற காரணங்களால் பெரும்பாலும் மின்சாரம் இன்றியமையாத் தேவையாகியுள்ளது. புதிய கட்டண முறை மின் கட்டணத்தை உயர்த்தும் செயலாகும். இதுவரை விவசாயிகள் பெற்று வரும் இலவச மின்சாரம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதன் மூலம் விவசாயிகள் மின் கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். விவசாயிகள் செலுத்த வழிவகுக்கும். இதே முறையில் குடிசைகளுக்கு ஒரு விளக்கு திட்டத்திற்கான இலவச மின்சாரம் ரத்தாகும். கைத்தறி, நெசவு ஆகியவற்றிற்கு வழங்கி வருகின்ற மானியமும் கேள்விக்குறியாகும்.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் கணக்கீட்டு பிரிவு பணியாளர்கள் வேறு பணிக்கு மாற்றப்படுவதோடு மின் உற்பத்தி, பகிர்மானம், தொடரமைப்பு விநியோகம் என ஒட்டு மொத்த மின் நிர்வாகமும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து, தனியார் கைகளுக்கு மாறிவிடும். சமூகநீதி இட ஒதுக்கீடு பறிபோகும். கேரள அரசு டோடெக்ஸ் முறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, தமிழக மின்வாரியத்தில் டோடெக்ஸ் முறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.