ஜம்மு காஷ்மீரின் பகல்காம் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-
காஷ்மீர் பகல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இந்த பயங்கரவாதத் தாக்குதலை- படுகொலையை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஒன்றிய பாஜக அரசு 2019 ஆம் ஆண்டில் காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்த சிறப்புரிமையை நீக்கி, அதனை இரண்டு ‘யூனியன் பிரதேசங்களாகப்’ பிரித்தது. ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளை ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை இன்னொரு யூனியன் பிரதேசமாகவும் பிரித்து, அவற்றில் ஜம்மு – காஷ்மீர் பகுதியை மட்டும் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக அறிவித்தது. அதன்பின்னர், ஜம்மு- காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து எதிர்க் கட்சிகளும் வலியுறுத்தி வந்தோம். ஆனால், மோடி அரசு ஐந்து ஆண்டுகள் கழித்து தான், 2024 ஆம் ஆண்டு இறுதியில் அங்கு தேர்தலை நடத்தியது. அதற்குப் பிறகும் கூட ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டனர். ஆனால், மோடி அரசாங்கமோ ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் முழுமையாக நடைமுறையில் இருப்பதாகவும், அங்கு அமைதி ஏற்படுத்தப்பட்டு விட்டதாகவும் இன்றும் தொடர் பரப்புரைகளைச் செய்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்னா் ஜம்மு- காஷ்மீருக்குச் சென்றுவந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் அங்கு தீவிரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டது என்றும், அமைதி நிலைநாட்டப் பெற்று சுற்றுலா தழைக்கிறது என்றும் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் அவ்வாறு பேசி சில நாட்களிலேயே இந்தப் பயங்கரவாத தாக்குதல்- படுகொலை நடந்துள்ளது. இந்தத் தாக்குதல் இந்திய அரசின் உளவுத்துறை உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளின் படு தோல்வியையே காட்டுகிறது. இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றபோது தார்மீகப் பொறுப்பேற்று அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அவர்கள் பதவி விலகினார். அதுபோல, அமித் ஷா அவர்களும் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
கோவிட் காலத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கையில் ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேர் குறைக்கப்பட்டதென்றும், இராணுவத்தின் ஒரே பிரிவினர் இரண்டு பகுதிகளைக் கண்காணிக்கும் படி ஆக்கப்பட்டதாகவும், இராணுவ வீரர்களின் எண்ணிக்கையைக் குறைத்ததுதான் இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமென்றும் ஓய்வு பெற்ற இராணுவ தளபதி பக்சி அவர்கள் தற்போது குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு ஒன்றிய அரசு உரிய விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
அமெரிக்க அரசின் நெருக்குதலுக்குப் பணிந்து காலாவதியாகிப் போன போர் விமானங்களைப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிட்டு வாங்குகிற மோடி அரசாங்கம், இராணுவ வீரர்களின் எண்ணிக்கையைக் குறைத்தும், அவர்களது ஊதியத்தைக் குறைத்தும் இராணுவ செலவை மட்டுப்படுத்தி விட்டதாகச் சொல்லிக் கொள்வது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து என்பதை இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. காஷ்மீரில் மட்டுமின்றி மணிப்பூரிலும் அமைதியை சீர்குலைத்து அதையும் வன்முறைக் காடாக்கிய பெருமை பாஜக அரசையே சேரும். மணிப்பூர் மாநில முதலமைச்சரே அங்கே தொடரும் வன்முறை வெறியாட்டத்துக்குக் காரணமாக இருந்தார் என்ற செய்தி பரவி அவர் பதவி விலகியது பாஜக அரசின் வன்முறை அரசியலுக்கு ஒரு சான்றாகும்.
எனவே, இனி ஜம்மு-காஷ்மீரில் இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும்; உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.