செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமீன் வேண்டுமா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் வரும் திங்கட்கிழமை வரை அவகாசம் கொடுத்துள்ளது.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் இருந்தார். அப்போது அவர் மீது பண மோசடி புகார்கள் எழுந்தன. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்த அமலாக்கத்துறை அவரை சிறையில் அடைத்தது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றங்களில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டுக் கொண்டே இருந்த நிலையில், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜி மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவையில் இடம் பெற்றார்.
இந்நிலையில், அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு தொடர்ந்தது. இந்த மனு மீதான விசாரணை தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மனு மீதான விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், ஜாமீன் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி வழங்கவில்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு மெரிட் அடிப்படையில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. அரசியல் சாசன பிரிவு 21ஐ மீறியதன் காரணமாகவே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டது. சாட்சிகளை செல்வாக்கு செலுத்தக்கூடிய அதிகாரத்தை எடுத்துக்கொள்ள உரிமம் வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
அப்போது இந்த விவகாரத்தில் முடிவெடுக்க அவகாசம் வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கேட்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள் திங்கட்கிழமை வரை அவகாசம் கொடுத்து, திங்கட்கிழமை தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. அந்தக் கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.