டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி. காஷ்மீர் தாக்குதல் குறித்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று சவுதி அரேபியா சென்றார். அவர் அங்கு செல்வது, இது 3-வது தடவை ஆகும். குறிப்பாக, ஜெட்டா நகருக்கு செல்வது இது முதல்முறை. ஜெட்டா விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை இளவரசரும், மக்கா பிராந்திய துணை கவர்னருமான சவுத் பின் மிஷால் பின் அப்துல்லாசிஸ், வர்த்தக மந்திரி மஜித் அல் கசாபி ஆகியோர் வரவேற்றனர். 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜெட்டா போய்ச்சேர்ந்தவுடன் பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில், ”ஜெட்டா வந்து விட்டேன். இந்தியா-சவுதி அரேபியா இடையிலான நட்புறவை இப்பயணம் வலுப்படுத்தும். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன்” என்று அவர் கூறி இருந்தார்.
பின்னர், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். ஹஜ் யாத்திரை பற்றியும், அதில் இந்தியர்களுக்கான ஒதுக்கீடு பற்றியும் மோடி பேசினார். பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) ஒரு தொழிற்சாலைக்கு சென்று அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்களுடன் உரையாட திட்டமிட்டிருந்தார். ஆனால் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு அவசரமாக இந்தியா திரும்பி உள்ளார். இதன்படி இன்று காலை டெல்லி விமானநிலையத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்.
இதனைத்தொடர்ந்து பகல்காம் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
இதனிடையே பகல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தனது அமெரிக்கா மற்றும் பெரு நாட்டு பயணத்தை ரத்து செய்துள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடு திரும்புகிறார். இந்த கடினமான மற்றும் துயரமான நேரத்தில் நம் மக்களுடன் இருக்க, நிர்மலா இந்தியாவுக்குத் திரும்ப உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில், இயற்கையை ரசிக்க சுற்றுலா பயணிகள் மீது, ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள், அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட, 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.