நான் மட்டுமல்ல.. சட்டமன்றமே அசந்துவிட்டது: அமைச்சர் அன்பில் மகேசை வாழ்த்திய ஸ்டாலின்!

சட்டப்பேரவையில் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ். அன்பில் மகேஷ் பேச்சை முதல்வர் ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்து அவருக்கு ஒரு வாழ்த்துக் குறிப்பை எழுதிக் கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் உரை ஆற்றி 25 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

ஒப்பனை செய்தால் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகலாம்.. கற்பனை செய்தாலும் கலைஞராக முடியாது. ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தையும் அறிவுசார்ந்த சமுதாயமாக மாற்றி வருகிறார் நம் முதலமைச்சர் ஸ்டாலின். ஒரு கல் எடுத்தார்.. இவ்வளவு பேர் சட்டமன்றம் வந்துவிட்டோம்.. ஒரு சொல் எடுத்தார் 40 பேரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவிட்டோம். அப்படிப்பட்டவர் நம் துணை முதலமைச்சர்.”

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கிய நிதி 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய். கடந்த நான்காண்டுகளில் மட்டும் திராவிட முன்னேற்றக் கழக அரசில் ஒதுக்கப்பட்ட நிதி 2 லட்சத்து 603 கோடி ரூபாய். கடந்த நான்காண்டுகளில் 10ஆம் வகுப்புக்கு 410 தேர்வு மையங்கள் 12ஆம் வகுப்புக்கு 415 தேர்வு மையங்கள் உருவாக்கி இருக்கிறது திமுக அரசு” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ். அன்பில் மகேஷ் பேச்சை முதல்வர் ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஒரு வாழ்த்துக் குறிப்பை எழுதிக் கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எழுதிய வாழ்த்துக் குறிப்பில், “தம்பி! உனது பேச்சால் நான் மட்டுமல்ல, சட்டமன்றமே அசந்து போய்விட்டது. வாழ்க! வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்தக் குறிப்பை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தலைவா! தங்களின் இவ்வரிகள் வாழ்த்து மட்டுமல்ல! எனக்கான வழிகாட்டல்!” எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்புகள்:

1. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 13 லட்சம் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் திறன் என்னும் முனைப்பு இயக்கம் ரூ.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

2. பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்துதல். 400 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்விப் பாடப்பிரிவுகளில் பயிலும் 12,000 மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்கள், மாநில திறன் மையம் மற்றும் வேளாண் அறிவியல் மைய ஆய்வகங்கள் ஆகியவற்றின் வாயிலாக, தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப மாணவர்களின் தொழில் முனைதல், செய்முறைத் திறன் மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் திறன் பயிற்சி வழங்கப்படும்.

3. வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியக் கல்வி. பள்ளி மாணவர்களிடம் வாழ்வியல் திறன்கள், விழுமியங்கள், பாலினச் சமத்துவம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சமூக ஊடகத்தின் முறையான பயன்பாடு, சுகாதாரமான பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், நேர்மறை எண்ணங்கள், போதைப் பொருள்களின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றில் விரும்பத்தக்க நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த விழிப்புணர்வுக் கட்டகம் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும்.

4. கலைத் திருவிழாப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குக் “கலைச்சிற்பி” என்ற தலைப்பில் கோடைக்கால சிறப்பு முகாம் நடத்தப்படும்.

5. அரசுப் பள்ளி மாற்றுத்திறன் மாணவர்களின் உடல் நலம் மற்றும் மன நலத்தை மேம்படுத்த தகுந்த விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்பட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

6. தொழிற்பயிற்சி நிலைய ஆய்வகங்கள் வழியாக 12,000 மாணவர்களுக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் திறன் பயிற்சி அளித்தல்.

7. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 விழுக்காடு தேர்ச்சிபெறும் அரசுப் பள்ளிகளுக்கும், 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

8. சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற தனியார் சுயநிதிப் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் ரூ.4.60 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

9. குழந்தைநேய திறன்மிகு வகுப்பறைக்கு ரூ.25 கோடி மதிப்பீட்டில் தளவாடப் பொருள்கள் வழங்கப்படும்.

10. புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்குதல் மற்றும் 38 பள்ளிகளைத் தரம் உயர்த்துதல்.

11. அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த மாணவர்களை அவர்கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக (School Ambassador) நியமித்தல்.

12. மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்.

13. ஆசிரியர்களின் வகுப்பறைப் பயன்பாட்டிற்கு கைப்பிரதிப் பாடநூல் வழங்கப்படும்.

14. மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும், நவீன தொழில்நுட்பச் சவால்களை எதிர்கொள்ளவும், கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் மாற்றியமைக்கப்படும்.

15. மாணவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்திட 1,25,000 ஆசிரியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.

16. தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழாசிரியர்களுக்கு ரூ.4.94 இலட்சம் மதிப்பீட்டில் பயிற்சி வழங்குதல்.

17. தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி ரூ.4.94 இலட்சம் மதிப்பீட்டில் வழங்குதல்.

18. பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதைகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மொழிபெயர்க்கப்படும்.

19. மூத்த வரலாற்று அறிஞர்களின் அரிய தமிழ்நாட்டு வரலாற்று நூல்கள் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.

20. அரசின் துறைத் தேர்வுகளுக்கான நூல்கள் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.

21. தந்தை பெரியார் குறித்த இலக்கியப் பதிவுகள் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் தொகுப்பாக வெளியிடப்படும்.

22. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கருத்தரங்கக்கூடம் அமைக்கப்படும்.

23. நூலகக் கட்டடங்கள் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மறுகட்டமைப்பு செய்யப்படும்.

24. கற்போர் எழுத்தறிவு மையங்களில் தொழிற் திறன் பயிற்சி வழங்குதல்.

25. இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் பொருட்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.