தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்!

காஷ்மீரின் பகல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதாக, அனைத்துக் கட்சி கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் உறுதிஅளித்தனர். தீவிரவாத முகாம்களை அழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

காஷ்மீரின் பகல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் -இ-தொய்பா ஆதரவு அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பிலும் பரஸ்பரம் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், பகல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த, இனிமேல் எடுக்க போகும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கும் வகையிலும், இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளை அறியவும் நேற்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

‘அனைத்து கட்சி கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. சிறிய கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்து அவர்களது கருத்தையும் கேட்க வேண்டும்’ என அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைஸி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அவருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்தது. அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் நேற்று மாலை நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு, மாநிலங்களவை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சி சார்பில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, திமுக சார்பில் திருச்சி சிவா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கும் முன்பு, தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது..

காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்தும், பகல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்தியஅரசு எடுத்துள்ள நடவடிக்கைகளையும், இனிமேல் எடுக்க போகும் நடவடிக்கைகளையும், அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கினர்.

நாட்டின் பாதுகாப்பு கருதி மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக, அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தே.ஜ கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உறுதி அளித்தனர்.

கூட்டத்துக்கு பிறகு, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, ‘‘பகல்காம் தாக்குதலுக்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தோம். ஜம்மு காஷ்மீரில் கூடிய விரைவில் அமைதி திரும்புவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்’’ என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘‘பகல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்கும். நான் காஷ்மீர் சென்று அனந்த்நாக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்திக்க உள்ளேன்’’ என்றார்.

திரிணமூல் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய் கூறும்போது, ‘‘தீவிரவாதத்தை ஒடுக்குவதில், அனைத்துகட்சிகளும் மத்திய அரசுக்கு துணை நிற்கும்’’ என்றார்.

ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறியபோது, ‘‘தீவிரவாத முகாம்களை அழிக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என அனைத்து கட்சிகளும் வேண்டுகோள் விடுத்தோம்’’ என்றார்.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியபோது, ‘‘நாட்டின் பொருளாதாரமும், சுற்றுலாவும் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் பகல்காம் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நிலவிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் உளவுத்துறை மற்றும் மத்திய உள்துறை அதிகாரிகள் விளக்கினர். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில், அனைத்து கட்சிகளுக்கு அரசுக்கு ஆதரவாக உள்ளன’’ என்றார்.