“பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால் அதை உலகளவில் அம்பலப்படுத்த வேண்டும். அவர்களை அந்நியபடுத்த வேண்டுமே தவிர யுத்தம் தேவையில்லாதது” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
திருச்சியில் நடைபெறும் திராவிடர் கழகம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று திருச்சி வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் கூறியதாவது:-
ஜாதி, மதம், இனம், மொழி என்கிற வேறுபாடு இல்லாமல் இந்தியர் என்ற உணர்வோடு பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும். ஆனால், இந்தியாவில் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பகை வளர்த்து, ஒற்றுமை இல்லாத சூழலை சங்பரிவார்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.
மத நல்லிணக்கம்தான் இந்திய ஒருமைப்பாட்டுக்கு தேவை என்பதை சங்பரிவார்கள் இந்த சூழலிலாதாவது புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என கூறுவதில் எங்களுக்கு எந்த அரசியல் ஆதாயமும் இல்லை. ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே. 370 சட்டப்பிரிவை நீக்கினால் ஜம்மு காஷ்மீரில் எந்த பயங்கரவாத நடவடிக்கைகளும் இருக்காது என பாஜக அரசு திரும்பத் திரும்ப கூறி வந்தது. அங்கு சுற்றுலா செல்லலாம் என்கிற அறிவிப்பை பாஜக அரசு வெளியிட்டது. அதனை நம்பி மக்கள் அங்கு சுற்றுலா சென்ற போது இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் பதவி விலகி முன்மாதிரியாக விளங்கினார். இந்நிலையில்தான் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். மீண்டும் மீண்டும் அதை வலியுறுத்துவோம். காஷ்மீரில் நடந்த தாக்குதல் இருநாட்டிற்கும் இடையேயான போராக மாறிவிடக்கூடாது. பயங்கரவாத தாக்குதலுக்கு ஒருநாடு பொறுப்பு என பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்கக்கூடாது. நம்முடைய வலிமையை வேறு நாட்டின் மீது நிரூபித்து காட்டக்கூடாது.
அது உலக நாடுகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால், அதை உலக அளவில் அம்பலப்படுத்த வேண்டும். அவர்களை அந்நிய படுத்த வேண்டுமே தவிர யுத்தம் தேவையில்லாதது. இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால், இந்தியாவில் சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு பயன்படவில்லை, மாறாக அதை தீவிரப்படுத்துவதற்கு தான் பயன்பட்டுள்ளது என்பது காஷ்மீரில் தற்போது நடந்துள்ள தாக்குதல் தெளிவுபடுத்தி உள்ளது. பயங்கரவாதிகள் ஜாதி, மதம் என எதையும் பார்க்க மாட்டார்கள். காஷ்மீரில் நடந்த தாக்குதல் மதத்தை பார்த்து நடந்த தாக்குதல் போல் தெரியவில்லை.
இந்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது. காஷ்மீருக்கு வரும் பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் எச்சரிக்கை விடும் விதமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை உள்ளது உள்ளபடியே புரிந்து கொள்ள வேண்டும். இதில் எந்த வித கற்பிதமும் தேவையில்லை. வி.சி.க சார்பில் வக்ஃபு சட்டத்தை கண்டித்து வரும் மே 31-ம் தேதி திருச்சியில் மிகப்பெரிய பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும்,, தமிழ்நாடு அரசுக்கும் முரண்பாடுகள் கூர்மை அடைந்துள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அவர் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தது தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி தருவதாக எல்லோராலும் உணரப்பட்டது. துணை வேந்தர்களுக்கும் நெருக்கடியை உருவாகியது. அந்த நெருக்கடியை ஆளுநர் திட்டமிட்டு உருவாக்கியுள்ளார். இன்று துணைவேந்தர்கள் அந்த மாநாட்டை புறக்கணித்து உள்ளார்கள். ஆளுநர் ஆர்.என். ரவியின் இதுபோன்ற செயல்பாடுகள் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. இவ்வாறு அவர் கூறினார்.