போலீஸ் மிரட்டியதால் ஊட்டி மாநாட்டுக்கு துணைவேந்தர்கள் வரவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி!

மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக போலீஸார் மிரட்டியதால்தான் ஊட்டியில் நடந்துவரும் துணைவேந்தர்கள் மாநாட்டில் அவர்கள் பங்கேற்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்நிலையில், இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பெரும்பாலானவர்கள் பங்கேற்காதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது:-

இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை. சிலர் ஊட்டி வந்தடைந்தனர். ஆனால் அவர்கள் மிரட்டப்பட்டனர். மாநில அரசின் போலீஸார் அவர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்கு சென்று கதவை தட்டி, நீங்கள் வீடு திரும்ப முடியாது என மிரட்டியுள்ளனர்.

மேலும், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் எதுவும் தெரிவதில்லை. ஆண்டுக்கு 6,500 பேர் முனைவர் பட்டம் பெறுகின்றனர். இவர்கள் ரூ.15,000 சம்பளத்துக்கு தினக் கூலிகளாக பணிபுரிகின்றனர். இவர்கள் அரசு துறைகளில் ஏதாவது பணியில் சேருவதே இலக்காக இருக்கிறது. ஆனால், தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர். இந்தியாவிலேயே சிறந்து விளங்கிய தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் நிலை தற்போது கவலைக்குரியதாக உள்ளது. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலையுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில், ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 2022 முதல் ஆண்டுதோறும் துணைவேந்தர்கள் மாநாட்டை ஊட்டியில் நடத்தி வருகிறார். இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் உள்ள 48 மத்திய, மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்று வந்தனர்.

இதற்கிடையே, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ரவி கிடப்பில் போட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டது. பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதாவும் அதில் ஒன்றாகும். இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டதாக கூறி 10 மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து, துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 16-ம் தேதி சென்னையில் நடத்தினார்.

பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பு இன்னமும் ஆளுநர் வசம் உள்ளதா அல்லது முதல்வர் கைக்கு மாறிவிட்டதா என்பதில் இன்னும் குழப்பம் நிலவிய பின்புலத்தில்தான் ஆளுநர் மாளிகை சார்பில் துணைவேந்தர்கள் வருடாந்திர மாநாடு ஊட்டியில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டுக்கு 49 பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணைவேந்தர்கள் 32 பேர் கலந்து கொண்டனர்.

அதேசமயம் அரசு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணைவேந்தர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொள்ளவில்லை. பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மட்டும் பங்கேற்றார். பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் இயக்குநர்கள், டீன் மற்றும் பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்றனர் என்பது கவனிக்கத்தக்கது.