ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் விபத்துகள் தொடர்கதையாகி விட்டது: எடப்பாடி பழனிசாமி!

“ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும், முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும் இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் நேற்று (ஏப்ரல் 25) நடந்த பட்டாசு வெடி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். இன்று காலை, விபத்து நடந்த பகுதியை பொதுமக்கள் ஆய்வு செய்தபோது, 100 மீட்டர் தொலைவில் ஒரு கால் மற்றும் அருகிலுள்ள வீட்டு முற்றத்தில் ஒரு கை கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறையினர் உடல் பாகங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த உடல் பாகங்கள் உயிரிழந்தவர்களுடையதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடந்த திருவீதி உலாவின்போது, பட்டாசு மூட்டை வெடித்ததால் செல்வராஜ், கார்த்திக், தமிழ்செல்வன், லோகேஷ் ஆகியோர் படுகாயமடைந்து உயிரிழந்தனர். மேலும், ஆறு பேர் படுகாயங்களுடன் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீட்டுப்பட்டி காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் அவர் கூறியுள்ளதாவது:-

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும், முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும் இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது. எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் மு.க.ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உரிய ஆவன செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.