உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னரும் தெளிந்த அறிவு இருந்திருந்தால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியிருப்பதாவது:-
ஜனநாயக மாண்புக்கும், ஆளுநர் பதவிக்கு உரிய மதிப்பும் தராத ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடுகளவு நியாய உணர்வும், சட்டத்தையும், உச்சநீதிமன்றத்தையும் மதிக்கும் உணர்வும், தெளிந்த அறிவும் இருக்குமானால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்து, ஆளுநர் மாளிகையைவிட்டு இந்நேரம் வெளியேறி இருக்கவேண்டும், 8.4.2025 அன்று உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பின்படி! ஆனால், அவர் அதைச் செய்யாத நிலையில், மீண்டும் மீண்டும் தனக்குள்ள பின்பலத்தினாலோ என்னவோ மீண்டும் சல்லடம் கட்டி ஆடி அரங்கேறுகிறார்; அவமானத்தை பொருட்படுத்தாமலேயே!
அவருக்குத் துணையாக, சட்டத்தின் ஆட்சிக்குத் துணையாக இருக்கவேண்டிய குடியரசுத் துணைத் தலைவர், தடம் புரண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உள்நோக்கம் கற்பிப்பதுபோலப் பேசி, பல வழக்குரைஞர்களின், சட்ட நிபுணர்களின் நன்மதிப்பை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்! கண்டனத்திற்கும் ஆளாகியுள்ள அவல நிலை! துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசமைப்புச் சட்டக் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கத் துணை போகும் வண்ணம் அவரது அழைப்பை ஏற்று, தமிழ்நாட்டிற்கு வந்து, ஆர்.என்.ரவிக்கு ‘நற்சான்று பத்திரம்’ வழங்கி உதகமண்டலத்தில் பேசி, அரசமைப்புச் சட்டத்தின் 159 ஆம் பிரிவின்படி, பதவிப் பிரமாணப்படி நடந்துகொள்ளாத ஒருவருக்கு ஆதரவாகப் பேசியிருப்பதைக் கண்டு நாடே நகைக்கும் என்பதில் அய்யமில்லை.
உதகமண்டலத்தில் ஆளுநர் கூட்டிய கூட்டத்திற்கு, துணைவேந்தர்கள் பலரும் சுமார் 32 பேர் போகவில்லை; காரணம், உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பைப் புரிந்துகொண்டதாலும், ஆளுநர் போட்டி அரசு நடத்தும் பொல்லாங்குதனத்துக்குத் துணை போகாமலும் தங்களது கடமையை ஆற்றிடும் தெளிவுடன் இருப்பதாலும்! இதற்கு நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்மீது வீண் பழிசுமத்தி, தன்னுடைய கோயபெல்ஸ் தனத்தைக் கொடியேற்றிக் காட்டியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒருமுறையா இந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, உச்சநீதிமன்றத்திடம் ‘குட்டு’ வாங்கியிருக்கிறார்? இரண்டு, மூன்று முறை அல்லவா? படிப்பினை பெற்று தனது பதவியின் கவுரவம், மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளாமல், மீண்டும் மீண்டும் அரசியல் அடாவடித்தனம் செய்வதா?
இத்தகையப் போக்கிற்கு ‘நற்சான்றாக’ குடியரசு துணைத் தலைவர் பதவியில் உள்ள ஒருவர் துணை போவது எவ்வளவு நியாயமற்ற போக்கு? முன்னுதாரணம் இல்லாத நிகழ்வும்கூட! கலந்துகொள்ளாத துணைவேந்தர்கள் என்ன சட்டம் தெரியாதவர்களா? ஏற்கெனவே ஊழல் வழக்கில் சிக்கி, சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தரிடம் விசாரணை நடக்கும்போது, மற்றொரு அறையில் இந்த ஆளுநர் ரவி, சேலம் சென்று தங்கியிருந்ததைவிட மகாமகா ஒழுக்கக்கேடான சட்ட மீறல் வேறு உண்டா? பதவியின் காரணமாக, தன்னை நீதிமன்றத்திற்கு அழைக்க முடியாது என்ற அந்த மதிப்புரிமையை இப்படி இவர் பயன்படுத்தி, அவதூறு செய்வது நியாயமா? சட்டப் பரிகாரம் தேட தமிழ்நாடு அரசும், நீதிமன்றமும் முன்வரவேண்டும்! ஒரு மாநில முதலமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டு, போலீஸ் ராஜ்ஜியம், நெருக்கடி காலம் என்று அழிபழி சொல்லும் ஆளுநர் போன்று, முன்மாதிரி இதற்கு முன் உண்டா? இதற்குரிய சட்டப் பரிகாரம் தேட, தமிழ்நாடு அரசும், நீதிமன்றமும் அல்லது மக்கள் மன்றமும் முன்வந்தாலொழிய, இந்தப் பகிரங்க ஜனநாயக, அரசமைப்புச் சட்ட மீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது, யோசியுங்கள்! இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.