காஷ்மீர் விவகாரத்தில் பொறுப்புணர்ந்து கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்: சரத்குமார்!

காஷ்மீர் விவகாரத்தில் தேசப்பற்று பொறுப்புணர்ந்து கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என நடிகரும் பாஜக உறுப்பினருமான சரத் குமார் கூறியுள்ளார்.

இது குறித்து சரத் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது உள்ளிட்ட பல அதிரடி முடிவுகளை பிரதமர் தலைமையிலான மத்திய அரசு அண்மையில் அறிவித்ததை, பயங்கரவாதத்தை எதிர்க்கும் அனைவரும் வரவேற்றுள்ளனர்.

இந்தக் கடுமையான சூழலில் இந்திய அரசோடு இணைந்து நிற்க உலக நாடுகள் முன்வந்திருக்கும் சூழலில் நமது தேசத்தில் இருந்து கொண்டே பாகிஸ்தானுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் சிலரது பேச்சுகள் அனாவசியமான பிளவுகளைத் தூண்டவே வழிவகுக்கும். பாகிஸ்தான் செய்த ஏவுகணை சோதனை தோல்வி அடைந்ததாகப் பரவிய காணொளி பொய் என்று தமிழகத்தை சேர்ந்த உண்மை கண்டறியும் குழு ஏன் பதற்றமடைந்து விளக்கம் கொடுக்கிறது என்பது புரியாத புதிர்.

நாடு மொத்தமும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முனைப்பாக இருக்கும் சமயத்தில், இங்கு பலரும் சிந்து நீரை நிறுத்தியது தவறானது, நோயாளிகளை பாகிஸ்தானுக்கு அனுப்புவது கொடுமையானது, பிரதமர் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதால் தான் கொலைகள் நடந்தது என்றெல்லாம் கருத்து கூறி வருபவர்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்பதை தான் காட்டுகிறது. இத்தகைய தேசப்பற்று இல்லாத கருத்துகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

சர்வதேச அரசியல் என்பது சாதாரண வாக்கு வங்கி நாடக அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டது. தேசியம் என்பதும் தேசத்தின் பாதுகாப்பு என்பதும் சாதாரண ஊடகப் பதிவு இடும் அரைகுறை அறிவுடைய நபர்களின் சிந்தனைக்கு எட்டாதது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.