பாஜக கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் சாசனத்தைச் சிதைத்து வருகிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
சுதந்திரத்தின்போது காங்கிரஸில் பல்வேறு சட்ட நிபுணர்கள் இருந்தார்கள். ஜவஹர்லால் நேரு, காந்தி, பட்டேல், ராஜாஜி உள்ளிட்ட பல சட்ட நிபுணர்கள் இருந்தாலும், அவர்களை எல்லாம் அரசியல் சாசனக் குழுவிற்கு தலைவராக நியமிக்காமல் அம்பேத்கரை தேர்ந்தெடுத்தார்கள் என்றால் காரணம் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்.
அன்று அம்பேத்கர் காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் கூட அல்ல. அண்ணல் அம்பேத்கரை தேர்ந்தெடுத்ததால் தான் அரசியல் சாசனம் வந்தது என்று பெருமைப்படுகிறேன். ஏழை எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், தலித் மக்கள் அகியோருக்கு உரிமைகள் கிடைத்தன. குறிப்பாக பெண்களுக்கு வாக்குரிமை சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளுக்கு பின்பு தான் அமெரிக்காவில் கிடைத்தது. ஆனால் குடியரசு ஆன முதல் நாளிலேயே அனைத்து மக்களுக்கும் உரிமையை அரசியல் சாசனத்தில் எழுதியது அண்ணல் அம்பேத்கர் தான்.
அரசியல் சாசனத்தின் முக்கிய அம்சமே கூட்டாட்சி. தேர்தலுக்கு முன்னால் 400 இடங்களை பெற போவதாக பாஜக சபதம் எடுத்தது. ஆனால் 400 இடங்களை மக்கள் பாஜகவுக்கு கொடுத்திருந்தால் அரசியல் சாசனத்தை தகர்த்து எறிந்து இருப்பார்கள். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் புல்டோசர் வைத்து வீடுகளை இடிக்கிறார்களே, அதுபோல அரசியல் சாசனத்தை சுக்கு நூறாக உடைத்து, புதிய குடியரசு நிறுவி, அரசியல் சாசனத்தை கொண்டு வந்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கூட தரவில்லை. பெரும்பான்மை கூட தரவில்லை, 240 தொகுதிகளோடு நிறுத்திவிட்டார்கள். இதனால் அரசியல் சாசனத்தை காப்பாற்றி விட்டோம் என மக்கள் நினைக்கலாம். ஆனால் மோடி தலைமையில் உள்ள அரசு ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியினர் வேறு திட்டத்தை வரையறுக்கிறார்கள்.
புல்டோசரை கொண்டுதானே அரசியல் சாசனத்தை தகர்க்க முடியவில்லை. உளி, சுத்தியல் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கலாம் என்று கடந்த ஓராண்டாக பல சட்டங்களை கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் சாசனத்தை சிதைக்கின்றார்கள்.
குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு திருத்தச் சட்டம் ஆகியவற்றை வைத்து அரசியல் சாசனத்தை சிதைக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். புல்டோசரை வைத்து சிதைத்தால் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதற்காக நின்று நிதானித்து திட்டமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வைத்து சிதைத்து வருகிறார்கள். தனிமனித உரிமைகள் சிதைப்பது, கல்வி உரிமையை சிதைப்பது இதெல்லாம் உதாரணங்கள். அரசியல் சாசனத்தை சிதைக்க தயாராக இருக்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.