விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி திருபுவனையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றுப் பேசியதாவது:-
ஒரே நேரத்தில் இரண்டு அணிகளிடம்/கட்சிகளிடம் பேசிக்கொண்டிருக்கிற ராஜ தந்திரம் எங்களுக்கு தெரியாது. நாங்கள் தவெகவுடனும் சரி, பாமகவுடனும் சரி, பாஜகவுடனும் சரி நாங்கள் சேர மாட்டோம். அந்த கட்சிகள் இடம் பெறுகிற கூட்டணியிலும் நாங்கள் சேர மாட்டோம். இதனால் என்ன பாதிப்பு ஏற்படும்? இதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பதவிதான் முக்கியம் என்று நான் நினைத்திருந்தால் என்னால் இப்படி பேச முடியுமா?
புதியதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் கூட புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்திருந்தார். ஆனால் நாம் கூட்டணியில் இருக்கிறோம். இந்த விஷயத்தால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். இப்படி சிறு விஷயத்தில் கூட்டணி பலவீனமடைந்தால் கூட அது பாஜகவுக்கு சாதகமாகிவிடும் என்பதை உணர்ந்து புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்காமல் தவிர்த்தோம். இதையெல்லாம் முன்கூட்டியே யூகித்து உணர்ந்து அந்த விழாவை புறக்கணித்தவன் திருமாவளவன். அந்த விழாவில் விஜய் என்னை பற்றி பேசியிருந்தார். அண்ணன் திருமாவளவன் இன்று வரவில்லை. ஆனால் அவரது மனம் நம்மோடுதான் இருக்கும் என்று கூறியிருந்தார். நான் நினைத்திருந்தால் விஜய் உடன் கூட்டணி அமைக்க கதவு திறந்திருக்கிறது என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த கதவை நான் மூடிவிட்டேன். அதுதான் நான். அதுதான் இந்த திருமாவளவன். அதுமட்டுமல்ல, பாஜகவுடனான கதவையும் நான் மூடிவிட்டேன்.
இந்த தேர்தலில் அதிமுக நமக்கு பல தொகுதிகளை தர தயாராக இருக்கிறது. அவ்வளவு ஏன் கூட்டணி ஆட்சிக்கு கூட அக்கட்சி தயாராக இருந்தது. துணை முதல்வர் பதவியை கூட கோரியிருக்கலாம். கூடுதலாக 4 அமைச்சர் பதவியையும் பெற்று தருகிறேன் என பலர் ஆசை காட்டினர். ஆனால் கூட்டணி கதவு மூடப்பட்டுவிட்டது. நீங்கள் நினைக்கும் சராசரி அரசியல்வாதியல்ல இந்த திருமாவளவன். இதனை நான் பல சந்தர்ப்பங்களில் உறுதி செய்திருக்கிறேன். இந்த ஆசைகளால் திருமாவளவனை வீழ்த்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.