அதிமுக, விஜய் கட்சிகள் உடனான கூட்டணி கதவுகளை மூடிவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறிய நிலையில், முதலில் அவர் தன் வீட்டு கதவை மூடட்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கிண்டல் செய்தார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின், அதிமுக மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி கதவுகளை மூடியதாகக் கூறிய கருத்துக்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், சென்னையில் பாஜக நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது தொடர்பாகவும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பெரிய எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிகழ்ச்சிக்கு முறையாக அனுமதி பெறவில்லை என்று கூறி காவல்துறையினர் எல்.இ.டி திரைகள் அகற்றப்பட்டன. இச்செயலுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “கடந்த ஆண்டு இதே நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு காவல்துறை ஆணையர் விஜயகுமார் அனுமதி மறுத்துவிட்டார். இது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தொகுதி என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதா அல்லது அவர் காவல்துறையை கட்டுப்படுத்துகிறாரா எனத் தெரியவில்லை” என்று அவர் கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நோக்கி, “அடக்குமுறையில் செயல்பட வேண்டாம். ஆட்சி நிரந்தரமல்ல” என்று எச்சரித்தார்.
நயினார், பாஜகவின் வளர்ச்சியை திமுக பொறுக்க முடியாமல், இத்தகைய தடைகளை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டினார். “அனுமதி வழங்கப்பட்டு ஒரு வாரம் ஆன பிறகும், பொது இடத்தில் நிகழ்ச்சி நடத்தக் கூடாது என மண்டபத்தில் நடத்தச் சொல்கிறார்கள். இது திட்டமிட்ட செயலா அல்லது பாஜகவின் வளர்ச்சியை தடுக்கும் முயற்சியா?” என்று அவர் வினவினார். இருப்பினும், மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்துவதால் வெயிலை தவிர்க்க முடிந்ததாக நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இத்தகைய தடைகளால் அதை மாற்ற முடியாது எனவும் தெரிவித்தார். “மக்களின் மாற்றத்தை தவறாக எண்ண வேண்டாம். ஆட்சி நிரந்தரமல்ல என்பதை திமுக உணர வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார். பாஜகவின் நிகழ்ச்சிகளை தடுப்பது, அவர்களின் வளர்ச்சியை பொறுக்க முடியாத மனநிலையை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திருமாவளவனின், அதிமுக மற்றும் விஜய்யுடனான கூட்டணி கதவுகளை மூடிவிட்டதாகக் கூறிய கருத்துக்கு நயினார் பதிலளித்தார். “திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கிறார். அப்படியிருக்க, அதிமுகவுடனோ விஜய்யுடனோ கூட்டணி கதவை எப்படி மூட முடியும்? முதலில் அவர் தன் வீட்டு கதவை மூடட்டும்” என்று கிண்டலாகக் கூறினார்.