பகல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும்: கபில்சிபல்!

பகல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று கபில்சிபில் கூறியுள்ளார்.

காஷ்மீரின் பகல்காமில் கடந்த 22-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில்சிபல் வலியுறுத்தி உள்ளார்.

அவர் கூறுகையில், ‘இந்தியா மீது அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு தொடர் ஒன்றை நடத்தி கண்டன தீர்மானம் நிறைவேற்றுமாறு பிரதமரை கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இந்த நாடு உங்களுடன் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் உங்களுடன் இருக்கின்றன. ஏனெனில் இது நாட்டின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்’ என தெரிவித்தார். மேலும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அடங்கிய குழு ஒன்றை முக்கியமான நாடுகளுக்கு அனுப்பி பாகிஸ்தான் மீது அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக நாடாளுமன்ற விவகார கேபினட் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. சிறப்பு கூட்டத்துக்கான தேதி முடிவு செய்யப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படும். இதன்பிறகு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் போரின்போது அப்போதேய பிரதமர் நேரு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டினார். இதை பின்பற்றி தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் சிறப்பு கூட்டத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது ஒட்டுமொத்த நாடும் ஓரணியாக செயல்பட வேண்டும். இதை உறுதி செய்ய, பஹல்காம் தாக்குதலை கண்டித்து நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்படும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.