விஜய் வருகையால் போக்குவரத்து இடையூறு: போலீஸார் வழக்குப் பதிவு!

கோவையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தலைமையில் நேற்று பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகையினை முன்னிட்டு விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஆகியவை தொடர்பாக இரு வழக்குகள் பீளமேடு காவல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 133 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கு கோவை மாவட்டம், குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இன்றும் இந்த பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கில் வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான களப் பணிகள் மேற்கொள்வது குறித்தும், ஆட்சி மாற்றத்துக்கான செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், அக்கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக நேற்று கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் திரண்டனர். இதனால் விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. கட்டுக்கடங்காத கூட்டத்தால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், விமான நிலைய வளாகத்தில் கட்சிக் கொடிகள் போன்றவை பயன்படுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்தல், விமான நிலையத்தில் இருந்த பேரிக்கார்டுகள், டிராலிகள் உள்ளிட்ட பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை விமான நிலைய சாலையில் இருந்து அவிநாசி சாலையில் இருக்கக்கூடிய தனியார் ஹோட்டல் வரைக்கும் சாலை மார்க்கமாக சென்றபோது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் சாலை மார்க்கமாக சென்றபோது அவரை பின்தொடர்ந்து ஏராளமான வாகனங்களில் ரசிகர்கள், தொண்டர்கள் சென்றனர். இதில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் விபத்தும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கருத்தரங்கு நடைபெற்ற கல்லூரி வளாகத்திலும் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இது தவிர உதயநிதி ஸ்டாலின் வருகையினை முன்னிட்டு நடப்பட்டு இருந்த திமுக கொடியினை சேதப்படுத்தியதாகவும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காளப்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், நடிகர் விஜய் ரசிகர்கள் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த செல்லமுத்து மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் ஆகிய இருவர் மீதும் இரு பிரிவுகளில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தவெக தலைவர் விஜயின் காரை பின் தொடர்ந்து வந்து கார், இரண்டு சக்கர வாகனங்கள் மூலம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய 133 வாகனங்கள் மீதும் போக்குவரத்து விதிமுறைகளின் படி வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.