பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைப்பதே நீண்ட கால தீர்வாக இருக்கும் என பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
கடந்த 22 ஆம் தேதி காஷ்மீரின் பகல்காம் பகுதியில் குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் பலியாகினர். நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. குற்றவாளிகள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் விடமாட்டோம் அவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத் தருவோம் என பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்க இந்த தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் இந்தியா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க பல முக்கிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு இரு நாடுகளும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய விமானப்படை, கப்பற்படை, தரைப்படை என முப்படைகளும் தயார் நிலையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு பதிலடியாக சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, அட்டாரி வாங்க எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு என இந்தியா அடுத்தடுத்து அதிரடி காட்டி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைப்பதே நீண்ட கால தீர்வாக இருக்கும் என பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பாகிஸ்தானை இந்தியா உடைப்பதே நீண்ட கால தீர்வாகும். அதாவது பலுசிஸ்தான், சிந்து, பாக்துனிஸ்தான் மற்றும் எஞ்சிய மேற்கு பஞ்சாப் என பாகிஸ்தானை நான்காக உடைக்க வேண்டும். இந்த நான்கையும் பாதுகாக்க இந்திய ஆயுதப் படைகள் தயாராக இருக்க வேண்டும். பலுசிஸ்தான், சிந்து, பாக்துனிஸ்தான் ஆகியவற்றை சுதந்திர நாடுகளாக இந்தியா அங்கீகரிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள மற்றொரு எக்ஸ் பதிவில், “இந்தியாவிற்கு பாகிஸ்தானுடன் நிலையான அமைதியை பெற என்ன வழிகள் இருக்கின்றன? தற்போது பாகிஸ்தானில் உள்ள மேற்கு பஞ்சாப், பலுசிஸ்தான், சிந்து, பஷ்தூனிஸ்தான் போன்ற பகுதிகள் கலக்கத்தில் உள்ளன. இந்தியா எதிர்கொள்ள வேண்டியது மீதமுள்ள பாகிஸ்தானையே. அதனால், இந்தியா பாகிஸ்தானை (அல்லது தற்போது உள்ள பாகிஸ்தானின் மீதமுள்ள பகுதிகளை) முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதே வழியாக இருக்கிறது” என கூறியுள்ளார்.