ஐ.பெரியசாமி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் ஐ பெரியசாமி அவரின் மனைவி, மகன்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது இரண்டு கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர், அவரின் மனைவி பி.சுசீலா, தற்போதைய பழனி திமுக சட்டமன்ற உறுப்பினரும் மகனுமான பி.செந்தில்குமார், மற்றொரு மகன் பி.பிரபு ஆகியோர் மீது திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கில் இருந்து விடுவித்த விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மேல் முறையீடு செய்தது. மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் ஐ பெரியசாமி உள்ளிட்டோர் தரப்பில் தங்களுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை கூறிய குற்றச்சாட்டுகள் முகாந்திரம் இல்லாதவை, சொத்துக்களை முறையாக கணக்கீடு செய்யாமல் தங்களுக்கு எதிரான வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. எனவே வழக்கிலிருந்து விடுவித்த திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு தரப்பில் முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிக்கை நகல்களை விளக்கி வாதிடப்பட்டது. விசாரணை நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார் மற்றும் பிரபு ஆகியோரை விடுவித்து உத்தரவை ரத்து செய்வதாகவும், குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணை தினந்தோறும் நடத்தி ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட எம்.பி மற்றும் எம்.எல்.ஏ மீது வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.