இந்து எழுச்சி முதல்வர் மு.க.ஸ்டாலினை பணியவைத்துள்ளது: வானதி சீனிவாசன்!

“தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட இந்து எழுச்சி, முதல்வர் மு.க.ஸ்டாலினை பணியவைத்துள்ளது” என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும், சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டத்துக்கு ஆளான வனத்துறை அமைச்சர் பொன்முடியும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது செய்திருக்கும் அமைச்சரவை மாற்றம் வழக்கமானது அல்ல. இந்த மாற்றம், முதல்வர் ஸ்டாலினின் விருப்பமும் அல்ல. நீதிமன்றங்களும், தமிழக மக்களும் அளித்த கடும் நெருக்கடியால், வேறு வழியின்றி, செந்தில் பாலாஜியையும் பொன்முடியையும் அமைச்சரவையில் இருந்து நீக்கி உள்ளார்.

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது செந்தில் பாலாஜி, ஓட்டுநர், நடத்துனர் பணிகளுக்கு பலரிடம் பணம் வாங்கியதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அதன் அடிப்படையில்தான், அவரை அமலாக்கத் துறை கைது செய்தது. அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் ஜாமீன் கிடைத்த அடுத்த இரு நாட்களில் அவர் மீண்டும் அமைச்சரானார். தற்போது உச்ச நீதிமன்றம் அவரின் ஜாமீனை ரத்து செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதால், வேறு வழியின்றி ராஜினாமா செய்திருக்கிறார்.சைவமும், வைணவமும் தமிழ்நாட்டின் இருபெரும் அடையாளங்கள்.

பன்னிரு திருமுறைகளும், நாலாயிர திவ்யபிரபந்தமும் இல்லாமல் தமிழ் இல்லை. நாயன்மார்களும், ஆழ்வார்களும் இல்லாமல் தமிழர்கள் இல்லை. தமிழர்களின் இருபெரும் சமயங்களின் புனித குறியீடுகளை கொச்சைப்படுத்தி, ஆபாசமாக பொது மேடையில் பேசிய பொன்முடி பேசிய அருவெறுக்கத்தக்க ஆபாச பேச்சுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொந்தளித்த பின், சென்னை உயர் நீதிமன்றம் அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட பின், வேறு வழியின்றி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

முன்பு இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் கொச்சைப்படுத்தி பேசுவது அதிக மக்களை சென்றடையாமல் இருந்தது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் பொன்முடி போன்றவர்களின் ஆபாச முகம் அனைவரிடமும் சென்று சேர்ந்து, அவர்களது இந்து மத வெறுப்பை மக்களிடம் அம்பலப்படுத்தி இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட ‘இந்து எழுச்சி’, முதல்வர் ஸ்டாலினை பணிய வைத்திருக்கிறது. இந்த எழுச்சி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்தும். இது தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றம். இனி யார் மீதும், யாரும் வெறுப்பை உமிழ்ந்து விட்டு தப்பி விட முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.