“இது அமித்ஷாவின் வேட்டைக்காடு அல்ல. தமிழ்நாடு என்பதை நாம் புரிய வைக்க வேண்டும். அதற்கு 2026 சட்டசபைத் தேர்தல் என்ற போரில் நாம் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாடு வெல்லும்.” என தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
கோவையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நேற்று வருகை தந்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அரசு விழாக்களில் பங்கேற்ற அவர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார். கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
கோவையில் இந்த மாநாடு நடப்பதை முக்கியமாக பார்க்கிறேன். கோவை என்றென்றும் திராவிட இயக்கத்தின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு உள்ளது. சட்டமன்றத்தை விட முக்கியமாக கருதுவது இந்த மாநாட்டில் கலந்து கொள்வதைதான். தமிழ்நாடு அடைந்த முன்னேற்றங்களுக்கு அடித்தளமிட்டது சுயமரியாதை இயக்கம் தான். பெரியார் தன் வாழ்நாளில் 13.20 லட்சம் கி.மீ தொலைவு பயணம் செய்தவர். அப்போதெல்லாம் இந்த காலத்தைப் போல் சாலை, மின்சார வசதிகள் இல்லை. பெரியார் தன் வாழ்வில் 10,700 பொதுக் கூட்டங்களில் பேசியவர். திமுக இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதலமைச்சர் போன்ற பதவிகளை விட உண்மையான பெரியாரின் கொள்கை பேரனாக இருப்பதில்தான் பெருமை கொள்கிறேன்.
பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன்பு, பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர் இணைக்கும் பழக்கம் இருந்தது. ஆனால், அவர் மறைந்த போது யாருடைய பெயருக்குப் பின்னாலும் சாதிப் பெயர் போடும் பழக்கம் இல்லை. நாட்டில் வேறு எங்கும் இல்லை. தி.மு.க ஆட்சியில் பெரியாரின் கொள்கைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பாசிஸ்ட்கள் வெறி பிடித்து அலைகிறார்கள். பாசிஸ்ட்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பதால் அவர்கள் கதறுகிறார்கள். பாஜகவோடு சேர்ந்து அதிமுகவும் கதறுகிறது. தமிழகத்தை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையும் காப்பாற்றுவதற்காகத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். அதனால் நம்முடைய முதலமைச்சரின் பெயரைக் கேட்டால் அவர்களுக்குப் பயம் வருகிறது. இது அமித்ஷாவின் வேட்டைக்காடு அல்ல. தமிழ்நாடு என்பதை நாம் புரிய வைக்க வேண்டும். அதற்கு 2026 சட்டசபைத் தேர்தல் என்ற போரில் நாம் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாடு வெல்லும்.
திராவிட மாடல் அரசு திட்டங்களால் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொழில் முனைவோர் ஆகி வருகின்றனர், அனைவரும் படிக்கிறார்கள். ஜாதி பெயரை போட்டுகொள்ளாத மக்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான் அது தான் இந்த இயக்கத்தின் வெற்றி. நம்முடைய கழகத்தை வீழ்த்த வேண்டும் என சிலர் எண்ணுகிறார்கள். திமுகவின் கருப்பு சிவப்பு வேட்டி கட்டி கொண்டிருக்கும் கடைசி தொண்டன் இருக்கும் வரை பாஜக கனவு நனவாகாது. பாஜகவுடன் கூட்டணி இல்லை எனக் கூறிய அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவை நேருக்கு நேர் நெஞ்சை நிமிர்த்தி எதிர்ப்பது திமுகதான். வருகிற சட்டசபைத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.