“ஒருகாலத்தில் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒவ்வொருமுறை உரசல்வரும்போதும் நான் பரிந்துரைத்தேன். ஆனால், இப்போது பகல்காம் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு என்ன பதில் சொல்ல முடியும்? இனியொரு ’பகல்காம் தாக்குதல்’ நடக்காத அளவில் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றனர்” என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நான் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும்படி ஒவ்வொரு முறையும் பரிந்துரைத்தவன். ஆனால், இப்போது நடந்த தாக்குதலில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம். நாம் அவர்களுக்கு நீதி செய்ய வேண்டாமா? பாகிஸ்தான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையே இன்று தேசம் விரும்புகிறது. பகல்காம் தாக்குதல் போல் இனியொருமுறை நடக்காத அளவுக்கு அந்தத் தாக்குதல் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
மத அடிப்படையிலான இரு நாட்டுக் கொள்கையை 1947-லேயே நிராகரித்தவர்கள் தான் ஜம்மு – காஷ்மீர் மக்கள். அதை இப்போதும் அவர்கள் எதிர்க்கத்தான் செய்கிறார்கள். நமது அண்டை நாட்டுக்கு (பாகிஸ்தானுக்கு) தான் நிகழ்த்தியது மனிதாபிமான படுகொலை என்பதையே உணர்ந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறான தாக்குதல்கள் மூலம் நாங்கள் (முஸ்லிம்கள்) பாகிஸ்தானுடன் சென்றுவிடுவோம் என அவர்கள் எண்ணுவார்களேயானால் அது நடக்காது என்று தெளிவுபடுத்த விரும்புகிறோம். 1947-லேயே போகாதவர்கள், இப்போது ஏன் அவர்களுடன் செல்லப் போகிறோம். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் எல்லோருமே சமம் தான். பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.