காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாளாவது விடுமுறை வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மாநில அரசு எந்த காரணமும் சொல்லாமல் அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இராம சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
காவல் துறை மீது எனக்கு எப்போதுமே ஒரு நல்லெண்ணம் உண்டு. காரணம், அவர்களுக்கு இருக்கும் கடுமையான பணிச் சூழல். எப்போதுமே நெருக்கடியில் இருக்கக்கூடியவர்கள் அவர்கள். எந்த உடல் கஷ்டங்களையும் வெளியில் சொல்லி ஓய்வெடுத்துக் கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள். போதை கலாச்சாரம், பயங்கரவாதம், அதிகரித்து வரும் கிரிமினல்களின் ஆதிக்கம், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு இடையே, மனித உரிமைகளையும் காப்பாற்ற வேண்டிய ஒரு கட்டாயம்.
அதோடு, ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் என்கிற குற்றச்சாட்டு. இவை எல்லாம் காவல்துறை சந்தித்து வரும் நெருக்கடிகள். அவர்களுக்கு வாரம் ஒரு நாளாவது விடுமுறை என்பது தான் அந்தப் பணிக்கு நாம் செய்யும் குறைந்தபட்ச அங்கீகாரமாக இருக்கும். இந்த உயர் நீதிமன்ற உத்தரவை மாநில அரசு எந்தக் காரணமும் சொல்லாமல் அப்படியே அமல்படுத்த வேண்டும். ஒவ்வொரு காவலரின் உடல் நலனிலும் குடும்ப நலனிலும் நாம் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.