மாநிலங்​களுக்கு விடு​தலையை பெற்று தந்​துள்​ளது தமிழகம்: முதல்​வர் ஸ்டா​லின்!

ஆளுநருக்கு எதி​ரான வழக்​கில் கிடைத்​திருக்​கும் தீர்ப்பு என்​பது தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தால் மாநிலங்​களுக்கு பெற்​றுத்​தந்​திருக்க கூடிய மாபெரும் விடு​தலை என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்றி அனுப்​பிய 10 சட்ட மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்​காமல் நிலு​வை​யில் வைத்​திருந்த நிலை​யில் அதை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்​தது. இந்த வழக்​கில் மூத்த வழக்​கறிஞர்​கள் முகுல் ரோஹ்தகி, அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவே​தி, பி.​வில்​சன் ஆகியோர் வழக்​காடி வெற்​றியை பெற்​றுத் தந்​தனர். இவர்​களுக்​கான பாராட்டு விழா சென்னை கிண்​டி​யில் நேற்று நடை​பெற்​றது. முதல்​வர் ஸ்டா​லின் தலைமை வகித்​து, வழக்​கறிஞர்​களுக்கு பாராட்டு தெரி​வித்​து, பொன்​னாடை அணி​வித்​து, செங்​கோல்​களை நினைவு பரி​சாக வழங்கி கவுர​வித்​தார். விழாவுக்கு வர இயலாத முகுல் ரோஹ்தகிக்​கும் முதல்​வர் வாழ்த்து தெரி​வித்​தார். தொடர்ந்து அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வரவேற்​புரை​யாற்றி முதல்​வர் ஸ்டா​லினுக்​கு, அரசி​யலமைப்பு சட்​டத்​தின் முகப்பு உரையை, நினைவு பரி​சாக வழங்​கி​னார்.

பின்​னர் நிகழ்​வில் முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது:-

மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மாநில அரசுகளை, ஆளுநர் என்ற நியமனப் பதவி மூலம் கட்​டுப்​படுத்​தலாம் என்ற எண்​ணத்​துடன், போட்டி அரசுகளை நடத்த தொல்​லைகள் கொடுக்​கும் காலத்​தில், மிக முக்​கிய​மான தீர்ப்பை உச்ச நீதி​மன்​றம் வழங்​கி​யிருக்​கிறது. இது தமிழகத்​துக்கு மட்​டுமின்​றி, மக்​களாட்​சிக்​கும், மாநில சட்​டப்​பேர​வை​களின் உரிமை​களுக்​கும் கிடைத்த மகத்​தான வெற்​றி.

ஆளுநருக்​கும், குடியரசுத் தலை​வருக்​கும் காலக்​கெடு நிர்​ண​யித்​தது மிகப்​பெரிய வெற்​றி. மத்​திய அரசுக்​கும், மாநில அரசுக்​கும் இடையே இருக்​கக்​கூடிய அதி​காரப் பகிர்​வில் மாநில அரசுகளின் உரிமை​களை எக்​காலத்​தி​லும் பாது​காக்​கும் வரலாற்று சாசன​மாக இந்த தீர்ப்பு நிலைத்​திருக்​கும்.

இது இந்​திய மாநிலங்​களுக்கு தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தால் பெற்​றுத் தந்​திருக்​கக் கூடிய மாபெரும் விடு​தலை. வழக்​குத் தாக்​கல் செய்த தமிழக​மும், வாதிட்ட வழக்​கறிஞர்​களும், தீர்ப்​பளித்த நீதிப​தி​களும் வரலாற்​றில் என்​றைக்​கும் நிலைத்​திருப்​பார்கள் என்​பது உறு​தி. இந்த தீர்ப்பு தந்த நம்​பிக்​கை​யில்​தான் மாநில சுயாட்​சிக் குழு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

முன்​ன​தாக வழக்​கறிஞர் வில்​சன் பேசும்​போது, “எதிர்க்​கட்​சிகள் ஆளும் மாநிலங்​களில் தங்​களது பதவியை பயன்​படுத்தி இடையூறு ஏற்​படுத்​தும் ஆளுநர்​களுக்கு எதி​ராக வழங்​கப்​பட்ட உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்பு தமிழகத்​துக்கு மட்​டுமின்றி அனைத்து மாநிலங்​களுக்​கு​மானது” என்​றார்.

தொடர்ந்து வழக்​கறிஞர் ராகேஷ் திவேதி பேசும்​போது, “ஆளுநர் என்​பவர் மாநிலங்​களில் அமைக்​கப்​படும் அமைச்​சர​வைக்கு ஆலோ​சனை​கள் வழங்​கலாமே தவிர, தனது வரம்பு மீறி நடந்து கொள்​ளக்​கூ​டாது. தற்​போது உச்ச நீதி​மன்​றம் அதை சரிசெய்​துள்​ளது” என்றார்.

வழக்​கறிஞர் அபிஷேக் சிங்வி பேசுகை​யில், “உண்​மை​யாக செங்​கோலுக்கு தகு​தி​யுடைய​வர் முதல்​வர் ஸ்டா​லின்​தான். பெரி​யார், அண்​ணா, கருணாநி​தியை தொடர்ந்து முதல்​வர் ஸ்டா​லினும் தமிழகத்தை சரி​யான பாதை​யில் வழிநடத்தி கொண்​டிருக்​கிறார்” என்​றார். இந்​நிகழ்​வில் மூத்த வழக்​கறிஞர்​கள், முன்​னாள் நீதிப​தி​கள், அமைச்​சர்​கள்​, எம்​.பி.க்​கள்​, எம்​எல்​ஏக்​கள்​ உள்​ளிட்​டோர்​ பலர்​ பங்​கேற்​றனர்.